கோட்டாபயவுக்கு எதிரான மனு அடியோடு நிராகரிப்பு! – மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி

* ராஜபக்ச அணியினர் கொண்டாட்டம்
* திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவின் இரட்டைப் பிரஜாவுரிமை குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவர் இலங்கைப் பிரஜைதான் என்பதை உறுதி செய்தது .அதேநேரம் மனுவைத் தள்ளுபடி செய்தது. நீதிமன்றம் ஏகமனதாக இந்த முடிவை அறிவித்தது

கோட்டாபய ராஜபக்ச இலங்கைக் குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நிறைவில் இன்று மாலை இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியன்கொட ஆகியோரால் தாக்கல் செய்த இந்த மனுவின் பிரதிவாதிகளாகக் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பலர் பெயரிடப்பட்டனர்.

கோட்டாபய ராஜபக்ச இலங்கைக் குடியுரிமை தொடர்பான முறையான சான்றிதழைச் சமர்ப்பிக்காமல் நாட்டில் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுள்ளார் என்று மனுதாரர்கள் தெரிவித்தனர்.

அதன் காரணமாக குறித்த பத்திரங்களை இரத்துச் செய்யும் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறும் மற்றும் மனு விசாரணை நிறைவடையும் வரை குறித்த பத்திரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு ஒன்றை வெளியிடுமாறும் மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையிலான நீதியரசர்களான அர்ஜுன் ஒபேசேகர, மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் மூன்று நாட்கள் விசாரிக்கப்பட்ட பின்னரே இன்று மாலை இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை எதிர்வரும் திங்கட்கிழமை கோட்டபாய தாக்கல் செய்யவுள்ளார்.

ராஜபக்ச அணி
கொண்டாட்டம்

கோட்டாபயவுக்கு எதிரான மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் அடியோடு நிராகரித்ததையடுத்து ராஜபக்ச அணியினரும், அந்த அணியின் ஆதரவாளர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு வெடிச்சத்தங்களினால் கொழும்பு அதிர்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *