சஜித் பிரேமதாஸவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்! – விக்டர் ஐவன் ஆரூடம்

“தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழைகளின் நாயகனாக சஜித் பிரேமதாஸவை மக்கள் நினைக்கிறார்கள். அந்த மக்களின் தொகை அதிகமானது. இது மஹிந்த மற்றும் கோட்டாபய தரப்புக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கும். அதனால் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் இலகுவான வெற்றியொன்றை பெறப் போகின்றார்.”

– இவ்வாறு ‘ராவய’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“எதிர்காலத்தில் வரவுள்ள ஜனாதிபதிக்குத் தற்போதுள்ள அதிகாரம் கூட இருக்காது. பெயரவில் ஒரு ஜனாதிபதி மட்டுமே. அதை இன்னும் எவரும் விளங்கிக்கொள்ளவில்லை. அனைத்து அதிகாரங்களும் நாடாளுமன்றத்துக்கு இயற்கையாகவே சென்றுவிடும். ஆகக் குறைந்தது ஒரு அமைச்சைக் கூட ஜனாதிபதி வைத்திருக்க முடியாது. 19ஆவது திருத்தச் சட்டத்தால் இதுவே நடந்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் மட்டுமல்ல சமூக வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ள தருணம் இது. மாற்றம் ஒன்று தேவையான நேரம். மாற்றுப் போட்டிகள் இருந்தாலும் சஜித் மற்றும் கோட்டாபய ஆகியோர் இடையில்தான் பிரதான போட்டி உள்ளது. கரு அல்லது ரணில் போட்டியிட்டிருந்தால் கோட்டாபயவுக்கு வெற்றிக்கான வாய்ப்புக்கள் இருந்தன. சஜித் ஒரு பெரும் ஆள் இல்லாது போனாலும் தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழைகளின் நாயகனாக சஜித் மக்களாால் பார்க்கப்படுகின்றார்.

இந்தத் தேர்தல் இந்தியாவில் காங்கிரஸூக்கும் – மோடிக்கும் நடந்த தேர்தலை ஒத்தது. மோடி மிகவும் கீழ் மட்டத்தில் இருந்து வந்தவர். அவர் தமது பிரச்சினையைத் தீர்ப்பாரா என்பது எல்லாம் மக்களின் எதிர்பார்ப்பல்ல. தங்களுடைய தரத்தில் ஒருவர் அரசனாகின்றான் என்பதே மக்களின் மகிழ்ச்சியாகின்றது. மோடியைத் தோற்கடிக்க அடிமட்டத்தில் இருந்து ஒருவர் வந்தால் மட்டுமே முடியும்.

சஜித்தின் தந்தை பிரேமதாஸ அடிமட்ட மக்களுக்கு அதிக சேவை செய்தவராக மக்களிடையே பிரபல்யமானவர். உண்மையிலேயே ஏழைகள் தலைநிமிர்ந்து நிற்கும் பல திட்டங்கள் அவருடையவை. அவற்றால் வாழும் கிராமத்தவர்கள் அதிகமானவர்கள். அந்தத் திட்டங்களே வேறு பெயர்களில் நாட்டில் இப்போது வலம் வருகின்றன.

இலங்கையில் பின்தங்கிய சமூகத்தினர் அதிகமாக வாழ்கிறார்கள். இதைவிட சஜித்தை அவர்கள் தமது மீட்பராக நினைக்கிறார்கள். இதனால் சஜித் இலகுவான வெற்றியொன்றைப் பெறப் போகின்றார். அடிமட்ட மக்கள் எனும்போது அது தென் பகுதியில் மட்டுமல்ல வடக்கிலும் – கிழக்கிலும் – மலையகத்திலும் கூட இதே நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தநிலை கோட்டாபயவுக்கு இல்லை. ஐ.தே.கவுக்கு உள்ள வாக்குகளைவிட அதிக வாக்குகளைப் பெற சஜித்துக்கு அதிக வாய்ப்பே உள்ளது. இது மஹிந்த மற்றும் கோட்டாபய தரப்புக்குப் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

இங்கே சஜித் பெரும் தர்சனவாதியா? எதிர்கால சிந்தனை உள்ளவரா? என்பதையெல்லாம் இந்த அடிமட்ட மக்கள் தேடப் போவதில்லை. எங்களில் ஒருவருக்கே என்று அந்த மக்கள் வாக்களிப்பதாக வாக்களிப்பார்கள். அதனால் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வெல்வதற்கான வாய்ப்புக்களே அதிகம்” – என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *