எந்தவொரு தரப்புடனும் எழுத்துமூல உடன்படிக்கைக்கு ஒருபோதும் இணங்கமாட்டோம்! – சஜித், கோட்டா இருவரும் உறுதியாகத் தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் கட்சிகளின் ஆதரவைக் கோரி அவற்றைத் தனித் தனியாக ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச இருவரும் சந்திக்கவுள்ளனர். இந்தச் சந்திப்புக்களின்போது எழுத்துமூல உத்தரவாதங்களையோ, உடன்படிகைகளையோ இருவரும் மேற்கொள்ளமாட்டார்கள். இதனை அவர்கள் இருவருமே உறுதிப்படுத்தியுள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பது என்றாலும், தமிழ்த் தேசியப் பிரச்சினை தீர்வுக்கான எழுத்துமூல உத்தரவாதத்தை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோசம் தமிழர் தரப்பிலிருந்து பலமாக எழுப்பப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் பிரதான வேட்பாளர்கள் சஜித் பிரேமதாஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ச இருவரின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

சஜித் பிரேமதாஸ

“புதிய அரசமைப்பின் ஊடாக பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பேன். அதேவேளை, வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்பில் கவனம் செலுத்துவேன். இந்த நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

எனக்கு எவரும் பாடம் சொல்லித் தரத் தேவையில்லை. எனது அரசியல் வாழ்க்கையில் பல பாடங்களைக் கற்றுவிட்டேன். நான் சின்னப்பிள்ளை அல்ல. இந்த நாட்டை ஆட்சி செய்த ரணசிங்க பிரேமதாசவின் மகனே நான். ஏழை மக்களின் தோழனும் நானே. எனது தந்தையின் வழியில் பயணிப்பேன். எந்தத் தடைகள் வந்தாலும் தகர்த்தெறிவேன். மிரட்டல்களுக்கு அடிபணியவே மாட்டேன். எனவே, இந்த நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூவின மக்களும் என்னை நம்பி வாக்களிக்கலாம்.

நிபந்தனைகள் எதனையும் ஏற்றுக்கொள்ளாமல்தான் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியுள்ளேன். இந்த நாட்டை முன்னேற்றும் வகையிலான பொதுக் கொள்கைத் திட்டத்தின் கீழ் வேட்பாளராகப் போட்டியிடுகின்றேன்.

சிறுபான்மை இன மக்கள் என்னில் நம்பிக்கை வைத்துள்ளார்கள். இந்தநிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவை வேண்டி அந்தக் கட்சிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக நான் சந்திக்கவுள்ளேன். ஆனால், இந்தச் சந்திப்புக்களின்போது எழுத்துமூல உத்தரவாதங்கள் எதனையும் நான் வழங்கவேமாட்டேன். அதேவேளை, உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடமாட்டேன். எனது பொதுக் கொள்கைத் திட்டத்தை சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களிடம் தெளிவுபடுத்துவேன். நாட்டின் எதிர்கால நலன் கருதியே எனது பொதுக் கொள்கைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது” – என்று தெரிவித்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ.

கோட்டாபய ராஜபக்ச

“நாம் ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டில் வாழும் மூவின மக்களும் ஏற்கும் அரசியல் தீர்வையே வழங்குவோம். இது உறுதி. எனவே, இதில் நம்பிக்கை வைத்து பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகள் எமது கட்சியை ஆதரிக்க வேண்டும். இதைவிடுத்து எந்த நிபந்தனைகளுக்கும் நாம் அடிபணிய மாட்டோம். அதேவேளை, எழுத்துமூல உத்தரவாதங்களையும் எந்தத் தரப்புக்கும் நாம் வழங்கவே மாட்டோம்.

பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகள் எந்த நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்று எமக்குத் தெரியாது. ஆனால், ஒவ்வொரு கட்சிகளுடனும் எமது கொள்கைத் திட்டத்தை விளக்கி நாம் பேச்சு நடத்தத் தயாராக இருக்கின்றோம்.

பேச்சுக்களின்போது அந்தக் கட்சிகள் எமது கொள்கைத் திட்டங்களை ஏற்பார்கள் என்றே நாம் நம்புகின்றோம். ஏனெனில், ஐக்கிய தேசியக் கட்சி அரசை இனியும் பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகள் நம்பினால் அந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முட்டாள்கள் என்றே கருதப்படுவார்கள்.

ஆனால், பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகள் எந்தத் தீர்மானத்தை எடுத்தாலும் தமிழ், முஸ்லிம் மக்கள் ஐ.தே.க. அரசை இனியும் நம்பி ஏமாறத் தயாரில்லை. பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்கள் நாட்டை நாசமாக்குகின்ற ஐ.தே.க. அரசுக்கு இந்தத் தேர்தலில் தக்க பாடம் புகட்டத் தயாராக இருக்கின்றார்கள். இந்த மக்களின் ஆதரவு எமக்கு மிகவும் அவசியம்” – என்று தெரிவித்தார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *