ஜனாதிபதித் தேர்தல் சமர் ஆரம்பம்! விரைவில் சூறாவளிப் பிரசாரங்கள்!!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை ஒக்டோபர் 7ஆம் திகதி தாக்கல் செய்த பின்னர், தேர்தல் பரப்புரையை ஆரம்பிப்பதற்கு பிரதான அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தி

இதன்படி ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் முதலாவது பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஒக்டோபர் 8ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு அவரது சொந்த ஊரான அநுராதபுரம், தம்புத்தேகமவில் நடைபெறவுள்ளது.

‘எமது நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளின்கீழ் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். அதன்பின்னர் பலகோணங்களில் தேசிய மக்கள் சக்தியின் பரப்புரைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதான பிரசாரக் கூட்டம் ஒக்டோபர் 9ஆம் திகதி அநுராதபுரம் நகரில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதானிகள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.

அத்துடன் மாவட்டம், தொகுதி, கிராமம் மற்றும் வீட்டுக்கு வீடு, இலத்திரனியல் எனப் பல வழிகளில் பரப்புரைச் சமரை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி முன்னெடுக்கவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி

அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது. ஒக்டோபர் 10 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு முதலாவது பிரசாரக் கூட்டம் காலிமுகத்திடலில் நடைபெறும்.

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் தொழிற்சங்க மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதானிகளும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *