தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதி இன்று சாட்சியம்! – ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சியமளிக்கவுள்ளார். இறுதிச் சாட்சியாளரான ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் அறிக்கையை நிறைவு செய்வதற்கு தெரிவுக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி – உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு கடந்த மே மாதம் 22ஆம் திகதி தொடக்கம் தமது விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மாத்திரம் தமது வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

கடந்த மாதம் அதற்கான அறிவிப்பை விடுத்த போதிலும் ஜனாதிபதி தெரிவுக்குழு முன்னிலையில் பிரசன்னமாக மறுப்புத் தெரிவித்திருந்தார். பின்னர் தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி எழுத்துமூல அறிவிப்பை ஜனாதிபதிக்கு விடுத்ததை அடுத்து தான் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராக இணக்கம் தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுத்துமூல அறிவிப்பை விடுத்திருந்தார்.

இந்தநிலையில், இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினர் செல்லவுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மூலமாக ஒருசில தகவல்கள் மாத்திரம் வெளியிடப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்கள் நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கலந்துரையாடினார்கள்.

“ஜனாதிபதி நாளை (இன்று) வெள்ளிக்கிழமை தெரிவுக்குழுவைச் சந்திக்க இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் மற்றும் முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கையை முழுமைப்படுத்த முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டம் ஆகியன குறித்தும் இதன்போது கலந்துரையாடினோம்” என்று தெரிவுக்குழுவின் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று பெற்றுக்கொள்ளும் வாக்குமூலத்தின் பின்னர் அறிக்கையை முழுமைப்படுத்தி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாதம் (ஒக்டோபர்) 31ஆம் திகதி வரையில் தெரிவுக்குழு இயங்குவதற்கான கால எல்லை நாடாளுமன்ற அங்கீகாரத்துடன் நீட்டிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *