ரணில், சஜித், கரு மொட்டுக்குத் தூசி! கோட்டாபய வெல்வது உறுதி!! – அடித்துக் கூறுகின்றார் மஹிந்த

“ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளாராக அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவோ அல்லது சபாநாயகர் கரு ஜயசூரியவோ களமிறங்கட்டும். எவர் களமிறங்கினாலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குச் சவால் அல்ல. அவர்கள் மூவரும் எமக்குத் தூசி.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

“ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெல்வது நிச்சயம். ஏனைய கட்சிகளில் களமிறங்கும் வேட்பாளர்கள் அனைவரையும் தோற்கடிக்கக்கூடிய வல்லமை கோட்டாபயவுக்கு உண்டு” எனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மும்முனைப்போட்டி நிலவுகின்றமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மும்முனைப் போட்டி அல்ல ஆறுமுனைப் போட்டிகூட நிலவட்டும். இதனால் எமக்குப் பிரச்சினை இல்லை. இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது. எனவே, எமது கட்சி இந்தத் தேர்தலில் இலகுவாக வெற்றியடையும். ஐ.தே.கவை இனியும் நம்புவதற்கு நாட்டு மக்கள் தயார் இல்லை. ஊழல், மோசடியால் இந்த நாட்டை ஐ.தே.க. நாசமாக்கிவிட்டது. தேர்தலில் நாம் வென்று ஆட்சியமைத்ததும் இந்த நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *