ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போடும் மைத்திரி, ரணில் முயற்சிக்கு செக் வைத்தது ஆணைக்குழு! – சூட்டோடு சூட்டாக தேர்தலுக்கான வர்த்தமானியை வெளியிட்டு அதிரடி

ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று விசேட கூட்டத்தைக் கூட்டி ஆராய்ந்து இந்தத் திடீர் முடிவை எடுத்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கான, பிற்போடுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதை அறிந்தே இந்தத் திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும் நேற்று மாலை 3 மணிக்கு கையெழுத்திட்டனர். உடனடியாகவே அரச அச்சகத்துக்கு வர்த்தமானி அறிவிப்பு அனுப்பிவைக்கப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை எந்த நேரத்திலும் வெளியிடலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இதன் பின்னர், ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்குடன் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் வேகமான காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக் காலம் எப்போது ஆரம்பமாகும் என்பது தொடர்பில் உயர்நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கேட்கவுள்ளார். ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்ட, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதியா அல்லது, 19ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்த திகதியா என்பதைத் தெளிவுபடுத்துமாறு உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறிவதற்கான கோரிக்கையை நாளை வெள்ளிக்கிழமை முன்வைக்கவுள்ளார்.

இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படுவதன் ஊடாக ஜனாதிபதித் தேர்தலை 14 நாட்கள் வரையிலும் தாமதப்படுத்த முடியும் என்று சட்டவல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மறுபுறம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான சட்டவரைவை, விசேட அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி அதன் அனுமதியோடு நாடாளுமன்றத்தில் நாளை வெள்ளிக்கிழமை சமர்ப்பிப்பதற்கும் திட்டமிட்டுள்ளார். இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மறைமுக ஆதரவும் கிடைத்துள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு சட்டவரைவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படுமாக இருந்தால், ஜனாதிபதித் தேர்தலை தாமதிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கருதுகின்றது.

இந்த விடயங்கள் தொடர்பில் நேற்று முழுநாளும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இருவரும் தீவிரமாக ஆராய்ந்தனர். ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போடுவதற்கு இடமளிக்க முடியாது என்ற முடிவுக்கு நீண்ட விவாதங்களின் பின்னர் மூவரும் வந்தனர்.

இதனையடுத்து ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக வெளியிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. நேற்று மாலை 3 மணியளவில் வர்த்தமானி அறிவித்தலில் மூன்று பேரும் கையெழுத்திட்டனர். வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *