நான் ஜனாதிபதியானால் ஒரு வருடத்துக்குள் தீர்வு! – கூட்டமைப்பிடம் ரணில் உறுதி

 

“நான் ஜனாதிபதியானால் அடுத்த ஒரு வருடத்துக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு ஆகியவை உள்ளடங்கிய புதிய அரசமைப்பை நடைமுறைக்குக் கொண்டு வருவதே எனது திட்டமாகும்.”

– இவ்வாறு பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தம்மைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவிடமே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

நேற்று மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை பிரதமரின் நாடாளுமன்ற அலுவலக அறையில் நடந்த இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களில் சிவமோகன் தவிர்ந்த ஏனையோர் இரா. சம்பந்தன் எம்.பி. தலைமையில் பங்குபற்றினர்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் வேட்பாளர் விடயங்கள் உட்பட பல அம்சங்கள் குறித்து இந்தப் பேச்சின்போது ஆராயப்பட்டதாக அறியவந்தது.

பேச்சின் ஆரம்பத்தில் கூட்டமைப்புத் தரப்பில் பின்வரும் விடயங்கள் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவிடம் எடுத்துரைக்கப்பட்டன.

* ஐ.தே.க. வேட்பாளர் யார் என்ற விடயத்தில் கூட்டமைப்புத் தலையிடாது. அது உங்கள் கட்சியின் விவகாரம், உங்கள் கட்சியே தீர்மானிக்க வேண்டும். உங்கள் கட்சியில் மூவரின் பெயர்கள் அடிபடுகின்றன. தேவையானால் மூவருடனும் நாங்கள் கலந்துரையாடத் தயார். போட்டியிடும் வேட்பாளர் யார் எனத் தீர்மானமானதும் அவருடனும் ஐ.தே.கவுடனும் நாங்கள் பேசுவோம்.

* தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில் வேட்பாளரினதும் கட்சியினதும் நிலைப்பாட்டை நாங்கள் அறிய விரும்புகின்றோம். கட்சியின் நிலைப்பாடும் இதில் முக்கியமானது என நாம் நினைக்கின்றோம்.

* ஐ.தே.க. மற்றும் அதன் வேட்பாளருடன் மட்டும்தான் நாம் பேசுவோம் என்றில்லை. அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களுடனும் நாம் பேசுவோம்.

* தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் ஒவ்வொரு வேட்பாளரினதும் கருத்துக்களைச் செவிமடுப்போம்.

* தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை நீதி, நியாயமான முறையில் நிறைவு செய்வதற்கு அதிக விட்டுக்கொடுப்பு மற்றும் உறுதிப்பாட்டுடன் முன்வருகின்ற வேட்பாளரை ஆதரிக்க நாம் முன்வருவோம்.

* தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்படுவதே எமது நோக்கம்.

– இவ்வாறு கூட்டமைப்புத் தரப்பில் கூறப்பட்டது.

இதற்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துப் பேசினார்.

“புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி கணிசமான அளவு தூரம் நகர்த்தப்பட்டு விட்டது. அதை நிறைவு செய்வதற்கு இனி அதிக காலம் தேவைப்படாது. நான் அதிகாரத்துக்கு வந்தால் அடுத்த ஒரு வருட காலத்துக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு ஆகியவை உள்ளடங்கிய புதிய அரசமைப்பை நடைமுறைக்குக் கொண்டு வருவதைப் பிரதான திட்டமாக வைத்துள்ளேன். அதைச் செயற்படுத்துவதில் நான் உறுதியாக இருப்பேன்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *