நான் ரணிலுடன் இணைந்து செயற்படவே விரும்புகிறேன்! ஐ.தே.கவிலிருந்து வெளியேறவேமாட்டேன்!! வேட்பாளர் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும்!!! – சஜித் உறுதியுடன் நம்பிக்கை

“ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் எண்ணம் எனக்கில்லை. நாட்டு மக்களின் கருத்துக்குச் செவிசாய்த்து, கட்சியின் தலைவருடன் இணைந்து செயற்படவே விரும்புகின்றேன். ஜனாதிபதித் தேர்தலில் எனக்கான வாய்ப்பைக் கட்சி வழங்கும் என உறுதியாக நம்புகின்றேன்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐக்கிய தேசியக் கட்சியானது ஜனநாயகக் கட்சியாகும். எனவே, தனிக் குடும்பமொன்றை மையப்படுத்தியோ அல்லது தனிநபரை முன்னிலைப்படுத்தியோ அல்லது தனி அறையில் இருந்தவாறோ இங்கு தீர்மானம் எடுக்கப்படுவதில்லை.

புரிந்துணர்வு, நட்பு, ஜனநாயகம் போன்றவற்றைக் கருத்தில்கொண்டே இங்கு வேட்பாளர் தீர்மானிக்கப்படுவார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ள ஜனநாயகத்தையும், பொதுமக்களின் எண்ணங்களையும் முதன்மைப்படுத்தியே இங்கு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி வருகின்றன. இதன்காரணமாகவே கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் நாடாளுமன்றக்குழுவைக் கூட்டி வெகுவிரைவில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றேன். கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இது குறித்து நேற்றுக்கூட எழுத்துமூலம் அறிவித்திருந்தேன்.

அந்தக் கடிதத்தில் எனது எண்ணங்கள் மற்றும் விருப்பங்கள் தொடர்பில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன். யாராக இருந்தாலும் உடனடியாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமியுங்கள் என்பதே எனது கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.

கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இரகசிய வாக்கெடுப்பு ஒன்றுக்கு செல்வதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வெகுவிரைவில் இதற்கான முடிவு வெளியாகும்.

கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் நாடாளுமன்றக்குழுவில் பெரும்பான்மை ஆதரவு எனக்குக் கிடைக்கும் என நம்புகின்றேன். அதன்காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தேன்.

எனக்கான வாய்ப்பைக் கட்சி வழங்கும் என திடமாக நம்புகின்றேன். எனவே, கட்சியிலிருந்து வெளியேறி தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ போட்டியிடும் எண்ணம் எனக்கில்லை.

நான் நாட்டு மக்களின் கருத்துக்குச் செவிசாய்த்து, கட்சியின் தலைவருடன் இணைந்து செயற்படவே விரும்புகின்றேன்

ஜனாதிபதித் தேர்தல் பற்றியே தற்போது முழுக் கவனமும் செலுத்தப்பட்டுள்ளது. பிரதமர் விவகாரம் குறித்தெல்லாம் தேர்தலின் பின்னரே கலந்துரையாடப்படும்.

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ழுழுமையான சந்திப்பு ஒன்றை நடத்த எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசியக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றபோது கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் மேலோட்டமான கலந்துரையாடல்களை மேற்கொண்டேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *