தமிழ் மக்களுக்கு சஜித் வைத்துள்ள தீர்வு என்ன? – சம்பந்தனின் கேள்வியால் திக்குமுக்காடினார் மங்கள

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தலையிடாது. அது கட்சியின் உள்விவகாரம். ஆனால், கட்சியின் தரப்பில் களமிறங்கும் வேட்பாளர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு வழங்கப் போகின்றார் என்பதே முக்கியம். இனியும் நாங்கள் ஏமாறுவதற்குத் தயாரில்லை. தமிழரின் தேசிய பிரச்சினைக்குத் தீர்வைத் தெளிவாகச் சொல்லுவோர் பற்றியே எங்களின் கவனம் இருக்கின்றது. அது ரணிலோ அல்லது சஜித்தோ அல்லது கருவோ என்பதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஏற்கனவே சஜித்துடன் நாங்கள் பேசினோம். ஆனால், தமிழர் பிரச்சினையில் அவரிடம் இருக்கும் தீர்வு என்ன என்பது தெளிவில்லை. தமிழருக்குத் தீர்வைத் தரக்கூடிய எந்தத் தரப்புடனும் அடுத்த கட்டப் பேச்சுக்கு நாம் தயார். அப்படியில்லாமல் நாங்கள் வெறுமனே பேசுவதில் அர்த்தமில்லை”

– இவ்வாறு தம்மைச் சந்தித்த சஜித் அணியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நாளுக்கு நாள் மோதலைத் தீவிரப்படுத்தி வருகின்றது. சஜித் அணியினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுப்பதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாஸ ஆதரவு அணியினர், அவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கக் கோரி மாபெரும் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.தே.கவின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க வேண்டுமாயின் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் ஆதரவைப் பெற்றுக்கொள்ளுமாறு சஜித் பிரேமதாஸவிடம், ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை சஜித் பிரேமதாஸ ஆதரவு அணி உறுப்பினர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்தினர். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று முற்பகல் 11 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

ரணில் ஆதரவு அணியைச் சேர்ந்த ராஜிதவை, மங்கள சமரவீரவே நேற்றைய சந்திப்புக்கு அழைத்து வந்துள்ளார்.

“ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை முதலில் தெரிவு செய்யுங்கள். அதில் நாம் தலையிட மாட்டோம்” என்று முன்னர் கூறியதைப் போன்றே கூட்டமைப்பினர் நேற்றைய சந்திப்பிலும் தெரிவித்தனர்.

“தமிழ் மக்களுக்கு சஜித் பிரமதாஸ முன்வைத்துள்ள அரசியல் தீர்வு என்ன? இது தொடர்பில் அவரிடம் தெளிவில்லை. தீர்வைத் தரக்கூடிய எந்தத் தரப்புடனும் அடுத்த கட்டப் பேச்சுக்கு நாம் தயார்” என்றும் கூட்டமைப்பினர் கூறினர்.

“தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு முக்கியம். இப்போது புதிய அரசமைப்பு ஒரு கட்டம் வரையில் நகர்ந்துள்ளது. அதனை முன்னெடுப்பதுதான் எமக்கு முக்கியம். யார் வேட்பாளர் என்பதை கட்சி தீர்மானித்த பின்னர், புதிய அரசமைப்பு முயற்சிகளை முன்னெடுப்பது தொடர்பில் அவருடன் பேசுவோம்” என்றும் கூட்டமைப்பினர் மேலும் தெரிவித்தனர்.

கூட்டமைப்பின் இந்தக் கருத்துக்களுக்கு பதிலளிக்க முடியாமல் சஜித்தின் சகாவான அமைச்சர் மங்கள சமரவீர திக்குமுக்காடினார். எனினும், இறுதியில் சஜித்துக்குக் கூட்டமைப்பின் ஆதரவு தேவை என்று அவர் நீண்ட நேரம் வாதப்பிரதிவாதங்களை முன்வைத்தார். ஆனால், கூட்டமைப்பின் கோரிக்கையில் நியாயம் உள்ளது என்று ரணிலின் சகா அமைச்சர் ராஜித குறிப்பிட்டார். இதனால் கூட்டமைப்பினுடனான சஜித் ஆதரவு அணியின் நேற்றைய பேச்சு வெற்றியளிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *