ஐ.தே.முவின் பங்காளிகளின் ஆதரவைப் பெற்றுவிட்டேன்! – சஜித் கூறுகின்றார்

ஐக்கிய தேசிய முன்னணிக்குள் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள பங்காளிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க முன்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவைப் பெற்றுகொள்ளுமாறு கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்குத் தெரிவித்தமைக்கு அமைய சஜித் முதலில் பங்காளிக் கட்சிகளை நேற்றுமுன்தினம் இரவு சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு அமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது.

ஜாதிக ஹெல உறுமய சார்பில் சம்பிக்க ரணவக்க, தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் மனோ கணேசன், பழனி திகாம்பரம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், ரவூப் ஹக்கீம், நிஸாம் காரியப்பர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ரிஷாத் பதியுதீன் ஆகியோரை, சஜித் பிரேமதாஸ, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, கபீர் காசிம், எரான் விக்கிரமரத்ன ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாகத் தகவல் வெளியிட்டுள்ள மனோ கணேசன், சஜித் பிரேமதாஸ தரப்பினருடனான கலந்துரையாடல் தீர்க்கமான முடிவுகளுடன் முடிவடைந்தது என்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி சார்பான ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தை அடுத்த வாரத்துக்கு மேல் இழுபறிப்பட ஒருபோதும் இடமளிப்பதில்லை என்பது உட்பட பல முக்கியமான முடிவுகள் இந்தச் சந்திப்பில் எட்டப்பட்டுள்ளன என்றும் மனோ கணேசன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *