தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஆரம்பம்! – இன்று பேரெழுச்சியுடன் திரளுமாறு அறைகூவல்

அமைதிப் படையாகத் தாயக மண்ணில் காலடி எடுத்து வைத்து ஆக்கிரமிப்புப் படையாக ஈழத் தமிழர்களை வேரறுக்கும் படையாக மாறி, வயது, பால் வேறுபாடின்றி தேசத்து உறவுகளை வேட்டையாடி – சூறையாடி அழித்தொழித்த இந்திய இராணுவத்துக்கு எதிராக அஹிம்சை வழியில், நீராகாரமும் இல்லாது 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை எழுச்சியுடன் ஆரம்பமாகவுள்ளது.

மக்கள் மத்தியில் விடுதலைத் தீயை விதைத்த திலீபன், உண்ணாவிரதப் போராட்டத்தை 1987ஆம் ஆண்டு ஆரம்பித்தான். ஈழத் தமிழரின் தாயக தேசம் எங்கும் நிலை கொண்டிருந்த இந்திய இராணுவம் மற்றும் இலங்கை அரசுக்கு எதிராக 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அஹிம்சைத் தீயை நல்லூரில் திலீபன் பற்ற வைத்தான். 12 நாட்கள் நீராகாரமும் இன்றி உண்ணாவிரதத்தை முன்னெடுத்த தியாக தீபம் திலீபன், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி வீரச்சாவைத் தழுவிக் கொண்டான்.

அஹிம்சையைப் போதித்த காந்திய தேசம் என்று சொல்லப்பட்ட இந்தியா, தியாக தீபம் திலீபனின் அஹிம்சைப் போராட்டத்தின் முன் தோற்றுப் போனது; திலீபனின் சாவை வேடிக்கை பார்த்தது. இதுவே பின்னாளில் விடுதலைப்புலிகள் இந்தியாவை ஈழமண்ணிலிருந்து அடித்து – விரட்டி துரத்தும் அளவுக்கு மாற்றம் கண்டது.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!!’ என்று முழக்கமிட்டு தாயக மண்ணை முத்தமிட்டு வீரகாவியம் படைத்த தியாக தீபம் திலீபனின் நினைவு நாள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகைப் பிரதேசங்களில் மிக உணர்வெழுச்சியுடன் கடந்த காலங்களில் நினைவுகூரப்பட்டது. சிவப்பு – மஞ்சள் கொடிகளால் தமிழர் தாயக மண் அலங்கரிக்கப்பட்டு, முக்கிய சந்திகளில் திலீபனின் உருவப்படம் வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

தாயக தேசத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர், பகிரங்கமாக – பொதுவெளியில் நினைவுநாள் நினைவுகூரப்படவில்லை. புலம்பெயர் தேசங்களில் மாத்திரம் பேரெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டு வந்தது.

கடந்த 2016ஆம் ஆண்டு, நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியில் – 10ஆண்டுகளின் பின்னர் பகிரங்கமாக நினைவுநாள் நிகழ்வுகள் முதன்முறையாக நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் திலீபனின் நினைவுத் தூபியில் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

யாழ். நல்லூர் ஆலயத்தின் பின் வீதியில், மாநகர சபையின் இந்து விடுதிக்கு அருகிலுள்ள தியாக தீபத்தின் நினைவுத் தூபியில் நினைவேந்தலுக்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் இ.ஆனோல்ட் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“ஆரம்ப நாள் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை தியாகி திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நேரமான காலை 9.30 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் நடைபெறும். அஞ்சலி செலுத்தவரும் சகலரும் குறித்த நேரத்துக்கு அரை மணித்தியாலங்களுக்கு முன்பாகவே நினைவுத்தூபி முன்றலில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். நிகழ்வின் நினைவுச் சுடரை எமது மக்களுக்காக உயிர்நீர்த்த மாவீரர்களின் பெற்றோர்களில் ஒருவர் ஏற்றிவைப்பார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் தமது அஞ்சலிகளை செலுத்துவர். உணர்வுபூர்வமான ஆரம்ப நினைவு நாள் நிகழ்வில் கட்சி பேதங்களுக்கு அப்பால் சகல அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மாவீரர்களின் குடும்பங்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் தமிழ் பேசும் மக்களாக ஒன்றாக அணிதிரண்டு நம் ஒற்றுமையை வெளிப்படுத்தி நிற்போமாக என்று பகிரங்க அழைப்பு விடுகின்றேன்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *