எனது அதிகாரங்கள் குறைக்கப்பட்டமையாலேயே சிறுபான்மையினரின் நலன்சார் முக்கிய விடயங்களை நிறைவேற்ற முடியவில்லை! – இலங்கை – இந்திய அரசியல்வாதிகள் முன்பாக மைத்திரிபால தெரிவிப்பு

“தமிழ் – முஸ்லிம் மக்கள் வழங்கிய அமோக வாக்குகள் எனது வெற்றிக்கு வழிசமைத்தது. எனது ஆட்சியில் நாட்டுக்கு நன்மை பயக்கும் பல விடயங்களைத் தற்துணிவுடன் முன்னெடுத்தேன். ஆனால், சிறுபான்மை இனத்தவர்களின் நலன் சார்ந்த முக்கிய விடயங்களை என்னால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. நாடாளுமன்றம் எனக்குரிய பல அதிகாரங்களைப் பறித்தெடுத்தமையே இதற்குக் காரணம்.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமின் புதல்வியின் திருமண நிகழ்வு கொழும்பிலுள்ள பிரபல தனியார் ஹோட்டலில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் இலங்கை, இந்திய அரசியல்வாதிகள் பலர் கலந்துகொண்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு இரு நாட்டு அரசியல்வாதிகளுடனும் உரையாடினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“சர்வாதிகார ஆட்சியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவே கடந்த தடவை ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினேன். அதில் வெற்றியடைந்தும் காட்டினேன். தமிழ் – முஸ்லிம் மக்கள் எனக்கு வழங்கிய அமோக வாக்குகள் என் வெற்றிக்கு வழிசமைத்தன. எனது ஆட்சியில் நாட்டுக்கு நன்மை பயக்கும் பல விடயங்களைத் தற்துணிவுடன் முன்னெடுத்தேன். ஆனால், சிறுபான்மை இனத்தவர்களின் நலன் சார்ந்த முக்கிய விடயங்களை என்னால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. நாடாளுமன்றம் எனக்குரிய பல அதிகாரங்களைப் பறித்தெடுத்தமையே இதற்குக் காரணம். ஐக்கிய தேசியக் கட்சி அரசே இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். எனினும், இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. நாட்டின் எதிர்காலத்தைச் சிறிதளவேனும் சித்திக்காது செயற்படும் சுயநல அரசியல் அனைவருக்கும் விரைவில் தக்கபாடம் புகட்டவுள்ளேன்” என்று இதன்போது அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *