சஜித்தின் எதிர்காலம் கூட்டமைப்பு கையில்! – ரணில் வைத்தார் புதிய பொறி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அக்கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சு எந்தவித இணக்கப்பாடுமின்றி முடிவுற்றுள்ளது.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவின்றி ஒன்றும் செய்யமுடியாது. அவர்களைப் பகைத்து தமிழர்களின் ஆதரவைப் பெறமுடியாது. ஆகவே, அவர்களுடன் கட்டாயம் பேச்சு நடத்துங்கள்” என்று சஜித்துக்குப் பிரதமர் ரணில் ஆலோசனை கொடுத்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளச் சென்ற அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, எரான் விக்கிரமரத்ன, ஹர்ஷ டி சில்வா ஆகியோர் ஆரம்பப் பேச்சுக்களில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ , ராஜித சேனாரத்ன ஆகியோரே முதலில் மூடிய அறைக்குள் பேச்சு நடத்தினர். இறுதிக் கட்டத்திலேயே ஏனையோர் உள்ளே அழைக்கப்பட்டனர்.

பிரதமர் ரணிலைச் சந்திக்க முன்னர் சஜித் தரப்பினர் மங்கள சமரவீரவின் நிதி அமைச்சில் ஒன்றுகூடி என்னென்ன விடயங்கள் பற்றிப் பேசுவதென ஆராய்ந்தனர். ஆனால், அந்தச் சந்திப்பு குறித்த தகவல் முன்கூட்டியே ரணிலுக்குச் சென்றதால் அவர் வந்த அனைவரையும் பேச்சில் பங்கேற்கச் சம்பதிக்கவில்லை.

நிதி அமைச்சில் நடந்த பேச்சு பற்றிய தகவலைத் தாம் அறிந்துள்ளார் என சஜித்துடனான சந்திப்பில் சூசகமாகத் தெரிவித்தார் ரணில்.

“முக்கியமான பல விடயங்கள் – குறிப்பாகத் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு குறித்து சிறுபான்மை இனக் கட்சிகளுடன் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நீங்கள் பேச வேண்டும். கூட்டமைப்புடன் பேசாமல் அவர்களின் இணக்கம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. கடந்த காலங்களில் தீர்வு விடயத்தில் அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்களைப் பகைத்துத் தமிழரின் ஆதரவைப் பெறமுடியாது” என்று சஜித்திடம் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஏற்கனவே சஜித்துடன் பேச்சு நடத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர்கள், இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் சஜித்தின் கொள்கை தெளிவற்று உள்ளதால் எழுத்து மூல உத்தரவாதம் ஒன்றை அவரிடம் கோர உத்தேசித்துள்ளனர் என்று அறிய முடிந்தது. ஆனால், அப்படி ஒரு உத்தரவாதத்தைக் கொடுத்தால் அது தென்னிலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதும் சஜித், அதற்கு இணங்கமாட்டார் எனக் கூறப்படுகின்றது.

இதனால் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுமாறு ரணில் வைத்த யோசனை, சஜித்துக்கு வைக்கப்பட்ட பொறி என ரணிலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *