அவன்கார்ட் விவகாரம்: கோட்டா உட்பட 8 பேரையும் விடுவிக்க நீதிமன்று உத்தரவு!

அவன்கார்ட் நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை முன்னெடுத்துச் செல்ல அனுமதியளித்ததன் ஊடாக அரசுக்கு ஆயிரத்து 140 கோடி ரூபா நட்டதை ஏற்படுத்தியதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை ஆட்சேபித்து முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்துள்ள மனுவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமே நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இலஞ்ச, ஊழல் ஆணைக் குழுவின் முன்னாள் பணிப்பாளர் டில்ருக்சி டயஸ் விக்ரமசிங்க, ஆணைக்குழுவின் எழுத்து மூல அனுமதியைப் பெறாமலேயே தான் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்துள்ளார் எனவும், எனவே அப்படித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிவான் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை கைவிட்டு தான் உள்ளிட்ட 8 பேரையும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்குமாறும் கோட்டாபய ராஜபக்சவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

எனினும், இலஞ்ச, ஊழல் சட்டத்தின் 78 (1) ஆம் பிரிவின் கீழ் ஆணைக்குழுவின் எழுத்து மூல அனுமதியைப் பெற்றுக்கொண்டு, இந்த விவகாரத்தில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளவர்களுக்கு எதிராகப் புதிதாக வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்ய எந்தத் தடையும் இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *