தூக்குத் தண்டனைக்கு வடக்கு மக்கள் ஆதரவு!

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுச் சிறைத்தண்டனை அனுபவித்து வருவோருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தி வரும் நிலையில், மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு வடக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – முற்றவெளியில் நடைபெற்றுவரும் என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியில் இது தொடர்பான கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.

ஜனாதிபதி செயலக அலுவலகக் கூடத்தில் இந்தக் கருத்துக் கணிப்பு முன்னெடுக்கப்பட்டது. தொடுதிரையின் மூலம் மக்கள் வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் வாக்களித்தவர்களில் 93.77 வீதமானோர் மரணதண்டனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 6.23 வீதமானோர் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கடந்த 43 வருடங்களாக மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்தநிலையில் போதைப்பொருள் கடத்தல், வர்த்தகம் தொடர்பாக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தி வருகின்றார்.

ஜனாதிபதியின் இந்த முடிவுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்து எதிர்ப்புக்கள் வெளிப்பட்டிருந்தன. மனித உரிமை அமைப்புக்கள் இந்த முடிவுக்குக் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *