யாழ்ப்பாணத்தில் ரணில்!

யாழ்ப்பாணம் மாநகர சபை மண்டபத்தை அமைப்பதற்கான அடிக்கல்லைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நட்டுவைத்தார்.

யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் சிறுவர் பூங்காவுக்கு முன்பாக முன்னர் மாநகர முன்னாள் மண்டபம் அமைந்திருந்த வளாகத்தில் புதிய மண்டபம் 2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்படவுள்ளது.

இதில் முதல் கட்டமாக இந்த வருடம் 700 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளிலும் கட்டம் கட்டமாக நிதி விடுவிக்கப்படவுள்ளது.

பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையில் இன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட், யாழ்ப்பாணம் மாநகர முன்னாள் ஆணையாளர் ஆகியோர் அடிக்கல்லை நட்டுவைத்தனர்.

உள்நாட்டுப் போர் காரணமாக 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் அழிவடைந்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் நிரந்தர மண்டபத்தை மீளவும் புதிதாக நிர்மானிப்பதற்கு 2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா நிதி பெருநகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *