சுதந்திரக் கட்சியே ஆட்சி அமைக்கும்! – மைத்திரி அதிரடி

* ரணில் தலைமையிலான ஐ.தே.க. மீது சரமாரியான குற்றச்சாட்டு
* மஹிந்த ஆட்சியில் அரங்கேறிய அராஜகங்களையும் பட்டியலிட்டார்

“உங்களில் அநேகமானவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் யார்? யாருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கப் போகின்றது? எனக் கேட்கின்றனர். நான் அதற்கு வழங்கும் பதில் என்னவென்றால் எமது கொள்கையின்படி 2020இல் அரசை அமைக்கப்போவது நாங்கள்தான் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிதான் என்பதை உங்களுக்குக் கூறுகின்றேன். அதற்குத் தயாராகுங்கள். நாம் எமது பலத்தைக் காட்டுவோம்.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது ஆண்டு நிறைவு தேசிய மாநாடு கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. அதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இன்று நாம் கட்சியின் 68ஆவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். கட்சியின் வரலாற்றை நீங்கள் நன்கறிவீர்கள். கட்சி, கட்சித் தலைவர்கள், கட்சி அரசு நாட்டைக் கட்டியெழுப்பிய விதத்தை நீங்கள் அறிவீர்கள்.

இங்கு ஆற்றப்பட்ட உரைகள் எனக்குப் பல்வேறு விடயங்களை நினைவூட்டின. குறிப்பாக பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற நாம் எமது உரிமைகள், சுயாதீனத் தன்மை, கலாசாரம், மொழிகள், மதங்கள் மற்றும் சமூகத்தின் வெவ்வேறு மட்டங்களில் உள்ள மனிதர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே அரசிலேயே முன்னேற்றமடைந்தனர்.

எஸ்.டபிள்யூ.ஆர்.டிபண்டாரநாயக்கவின் அரசியல் கொள்கை காரணமாக அதுவரை வரப்பிரசாதங்களைப் பெற்ற செல்வந்த வர்க்கத்தினர் ஒடுக்கப்பட்டார்கள். சாதாரண பொதுமக்கள் முன்னேற்றம் கண்டனர். இன்று இந்த நாட்டில் உள்ள பிரச்சினை என்ன? என நான் உங்கள் மனச்சாட்சியிடம் கேட்கின்றேன். இந்த நாட்டின் அரசியலில் நாடாளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் இவை அனைத்தையும் கருத்தில்கொள்ளும்போது அவற்றுடன் சம்பந்தப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் செயற்பாட்டாளர்களில் எத்தனை பேர் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். மிகக் குறைந்த அளவினரே அவ்வாறு செயற்படுகின்றனர்.

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் மனிதநேயத்துடன் எமது மரபுரிமைகள், எமது கலாசாரம் ஆகியவற்றை பாதுகாத்தவாறு எமது நாட்டை நாமே அர்ப்பணிப்புடன் கட்டியெழுப்புவோம். ஊழல், மோசடிகளின்றி எமது நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற கோட்பாட்டுடன் எத்தனை அரசியல்வாதிகள் ஒத்துப்போகின்றார்கள். இதிலேயே பிரிச்சினை உள்ளது. தவளையைப் போன்று அங்குமிங்கும் தாவிக்குதிப்பது நாட்டுக்காக சிந்திப்பவர்கள் அல்லர். அவர்கள் அனைவருமே தங்களுக்காக, தமது தனிப்பட்ட எதிர்காலத்தினை மாத்திரம் சிந்திப்பவர்கள் மாத்திரமே ஆகும்.

அடுத்த அமைச்சுப் பதவி, நாடாளுமன்ற உறுப்பினர் அந்தஸ்து, கட்சி தலைமைத்துவம் எப்படி அமையும் என்ற சிந்தனையிலேயே இந்த நாட்டின் பெரும்பாலான அரசியல்வாதிகள் உள்ளனர். எமது மக்கள் இதற்கே தீர்வுகாண வேண்டும். ஒரு அமைப்பு அல்லது நபர்கள் பற்றி சிறந்த அரசியல் கட்சி, சிறந்த அமைப்பு, சிறந்த நிறுவனம், சிறந்த நபர் என உறுதிப்படுத்தக்கூடிய சிறந்த சாட்சியாக அமைவது அவர்களது வரலாறாகும்.

வரலாறு இன்றிய மனிதர்களுக்கு அடையாளங்கள் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிறந்த வராலற்றுக்கு உரிமை கோரும் கட்சியாகும். சுயாதீனத்தன்மை, எமது கலாசாரம், எமது மரபுரிமைகளுடன் ஊழல் மோசடியற்ற ஆட்சிக் காலத்தையுடைய வரலாற்றைக் கொண்ட உண்மையான கௌரவத்தைக் கொண்ட கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே ஆகும் என்பதை நான் தெளிவாக கூறிக்கொள்கிறேன்.

இதன்போது நாம் கவனம் செலுத்த வேண்டிய பல விடயங்கள் காணப்படுகின்றன. அவற்றில் முதலாவதாக அமைவது ஏழு தசாப்தங்களாக நாம் பின்பற்றிய மக்கள் நேயமானது எனக் கூறப்படும் மோசடிமிக்க அபிவிருத்திப் பாதையில் மென்மேலும் பயணிப்பதா அல்லது நாட்டின் அபிவிருத்திக்கான மாற்று வழியொன்றை இனங்கண்டு அதில் பயணிப்பதா என்பதாகும்.

இரண்டாவதாக இதன்போது தேர்ந்தெடுக்கப்படுவது மாற்று அபிவிருத்திப் பாதையாக அமையுமாயின் அத்தகைய அபிவிருத்திகளை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய சரியான அரசியல் கோட்பாடு எது? என்பதை நாம் தேர்ந்து எடுப்பதேயாகும்.

மூன்றாவதாக அத்தகைய மாற்று அபிவிருத்திப் பாதை மற்றும் அரசியல் கோட்பாட்டுடன் கூடிய அரசியல் சக்தி மற்றும் அதற்காக வழங்கப்படும் தலைமைத்துவத்தின் பின்னணி என்ன என்பதை உணர்ந்து கொள்வதாகும்.

உண்மையில் இன்றைய அரசியல் சூழ்நிலையில் சரியான பாதை எது என்பதை உங்களால் மதிப்பீடு செய்ய முடியுமா? சரியானவர்கள் யார் என்பதை உங்களால் உறுதிப்பட கூற முடியுமா? எந்தக் கட்சியின், எந்தத் தலைவரின் பாதை சரியானது என்பதை உங்களால் கூற முடியுமா? இலங்கையின் ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பும் தற்போது குழப்பங்கள் நிறைந்ததாகக் காணப்படுகின்றது. கவலைக்கிடமானதாக உள்ளது. நாட்டைப்பற்றி சிந்திக்கையில் கவலை ஏற்படுகின்றது. அதுவே உண்மையான நிலைமை. நாம் தொலைக்காட்சிகளில், செய்தி அறிக்கைகளில், கலந்துரையாடல்களில் பலவற்றைக் கூற முடியும். சத்தமிட்டு கூச்சலிட்டுப் பேச முடியும். ஆனால், பிரச்சினைகள் தீர்க்கப்படப்போவதில்லை.

2500 வருடங்களாக பாதுகாக்கப்பட்டுவரும் அஹிம்சையை அடிப்படையாகக் கொண்ட பௌத்த தர்மத்தை பின்பற்றும் மனிதநேயமுடைய இந்த உன்னத தேசத்தின் எதிர்கால இருப்பு அல்லது அழிவு இன்றைய அரசியல்வாதிகளின் கையிலேயே இருக்கின்றது. ஒரு நாடு என்ற வகையில் நாட்டின் அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வெற்றியை பெற்றுத்தரக்கூடிய அபிவிருத்தியையே இன்று நாம் அடைய வேண்டியுள்ளது.

பக்கச்சார்பற்ற அபிவிருத்தியின் பெறுபேறுகளை அனுபவிப்பதற்கு அனைத்து மக்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அத்தகைய பொருளாதாரத்தையே மக்கள் பெற வேண்டும். அத்தோடு அந்த அபிவிருத்தி வினைத்திறனாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டும். அதற்காக நாம் பசுமை பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

அபிவிருத்தியை தொழிநுட்பத்தினாலேயே வினைத்திறனாக்க முடியும். அதனை இன்று ஸ்மார்ட் தொழிநுட்பம் எனக் குறிப்பிடுகின்றனர். அத்தகைய தொழிநுட்பத்தினால் ரொபோ தொழிநுட்ப ஆற்றலுடன் கூடிய தொழிநுட்ப யுகம் ஒன்றை நாட்டில் எம்மால் உருவாக்க முடியும். அதுவே இன்றைய பிரச்சினைகளுக்குத் தீர்வாகும்.

சுமார் 05 வருடங்களுக்கு அண்மித்த எனது ஆட்சிக்காலத்தை யார் எந்த வகையில் விபரித்தாலும் மேற்குறிப்பிட்ட பண்புகளுடன் கூடிய அபிவிருத்திப் பாதையை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு நான் முயற்சித்ததையும் அதற்காக நான் போராட நேர்ந்ததையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

ஊழல், மோசடியை ஒழிப்பதற்கும் நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிராகவும் அபிவிருத்தியை சரியான திசைக்குக் கொண்டு செல்வதற்கும் ஒழுக்கமான சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கும் நாட்டில் அனைவருக்கும் சமனாக சட்டத்தை அமுல்படுத்தும் நிலைக்குக் கொண்டுவரவும் நான் போராட வேண்டியிருந்தது.

2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் எதிர்நீச்சல் அடித்தே நான் வெற்றி பெற்றேன். அது எவ்வளவு சவால் மிக்கது என்பதை அன்று கட்சி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கும் மக்களுக்கும் தெளிவாகத் தெரியும். அன்று அந்த சவாலை வெற்றிகொண்டு உருவாக்கப்பட்ட அரசு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை இன்று சிலர் மறந்து விட்டனர். ஆனால், பலர் ஞாபகம் வைத்துள்ளனர். அந்த அரசு ஓரளவு வேலைத்திட்டங்களை முன்னெடுத்த போதிலும் மற்றைய பிரிவினர் என்னால் என்றுமே அனுமதிக்க முடியாத நாட்டுக்குப் பொருத்தமற்ற பல செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அவை எமக்குப் பொருத்தமானதல்ல. பிரபு வர்க்கத்தைச் சாராத ஜனாதிபதி என்ற காரணத்தால் அத்தகைய சாதகமான செயற்பாடுகளுக்கான பாராட்டுக்கள் இந்த நாட்டுக்கு சாபக்கேடாக உள்ள பிரபு வர்க்கத்தை சார்ந்த அரசியல்வாதிகளால் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கின்றது.

இன்று எமது நாட்டில் நிலவும் பிற்போக்கான நிலைமைக்கு மக்கள் அறிய முடியாதவாறு திரைமறைவில் மேற்கொள்ளப்படும் இந்தப் பிரபு வர்க்கத்தின் அரசியலே காரணமாகும். அதன் அடிப்படை வியாபாரமாகும். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த ஏமாற்றுத்தனமான அரசியலை மக்களுக்கு வெளிப்படுத்துவதைப் போன்றே அதனை தோல்வியடையச் செய்ய வேண்டியது இந்த யுகத்தின் முதன்மையான கடமையாகும்.

இதற்காகப் பலமான மக்கள் பலத்தை, மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டுவதே இன்று எம்முன் காணப்படும் பொறுப்பாகும். நாட்டின் அபிவிருத்தி அரசியல் தலைமைத்துவத்தின் வடிவமாக அமைய வேண்டியது நாம் கட்டியெழுப்பும் இந்த அரசியல் சக்தியாகும். அது பிரபு வர்க்கத்தினரற்ற அரசியல் சக்தியால் இயக்கப்பட வேண்டும். இன்று எமது நாட்டின் செல்வந்த, மோசடி அரசியல்வாதிகள் ஓர் அணியில் திரண்டுள்ளனர். மக்கள் அதனைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு கட்சி, இன, மத, பேதமில்லை. மோசடிமிக்க பிரபு வர்க்கத்தினர் ஒரு அரசியல் அணியில் இணைந்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இதனைப் புரிந்துள்ள வேண்டும். மோசடிமிக்க பிரபு வர்க்க நண்பர்கள் கூட்டணி மக்களுக்கு இன்றும் இரகசியமாகவே உள்ளது. அதனைப் பகிரங்கப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

நாட்டில் பெரும்பாலானோர்கள் பிரபு வர்க்கத்தைச் சாராத செல்வந்தர்கள் அல்லாதவர்களே ஆவர். நாட்டின் எதிர்காலம் இவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

இன, மத, பேதமின்மின்றி இவர்களது போராட்டம் அநீதிக்கு எதிராக அமைய வேண்டும். எனினும், பிரபு வர்க்கத்தினரின் அரசியலில் இனவாதம், மதவாதம் என்பன அவர்களது இறுதி அரசியல் துருப்பாகவே பயன்படுத்தப்படும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிறிய மனிதர்களின் அரசியல் கட்சியாகும். நாம் எமது பொறுப்புக்களையும் கடமைகளையும் புரிந்துகொள்ள வேண்டும். பிரபு வர்க்க, மோசடி அரசியல்வாதிகள் ஓரணியாக இணைந்து எனக்கு எதிராக உள்ளனர். நான்கரை வருடங்களாக நாட்டுக்குச் சேவை செய்வதை விடுத்து அவர்களுக்கு எதிராகவே போராட வேண்டியிருந்தது. இன்றும் மோசடி அரசியலையே நாடு தழுவிக்கொண்டுள்ளது. இன்று இந்த நாட்டில் எங்குதான் ஊழல் இல்லாமல் இருக்கின்றது. நாடாளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் என்பவற்றின் நிலைமை என்ன? கொழும்பு மாநகர சபை முதல் 90 சதவீதமான உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் நிறைந்துள்ளது. கட்டட வரைபடத்திற்கு, காணி வரைபடத்திற்கு அங்கீகாரம் பெற தவிசாளருக்குப் பல மில்லியன் கொடுக்க வேண்டும். இந்த நிலைமை இருக்கின்றதா? இல்லையா? என நான் கேட்க விரும்புகிறேன்.

உள்ளூராட்சி நிறுவனங்கள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுக்கும் பொதுவானது. அப்படியாயின் இதற்குப் பொறுப்புகூற வேண்டியவர்கள் யார்? ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டுமே ஊழலை ஒழிக்க முன்வரவில்லை. தமக்குப் பொறுப்பான உள்ளூராட்சி சபைகளில் ஊழல், மோசடிகள் இல்லை என எந்தவித உறுதியையும் வழங்க முடியாத நிலையில் உள்ளனர். ஆகையினால் இந்த நிலைமையைப் புரிந்துகொள்ளுதல் அவசியமாகும்.

இன்று நாட்டுக்குப் பொருத்தமான அரசியல்வாதி யார்? என்பதை அறிந்துகொள்ள வேண்டும். எனது ஆட்சிக்காலத்தில் இந்த அரசால் செய்யப்பட்ட மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்ட மத்திய வங்கி கொள்ளைக்குக் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் இந்த நாட்டு அரசியலில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும். அவர்கள் இன்று தூய்மையான கனவான்களாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கின்றனர். இன்னும் பல விடயங்கள் எதிர்வரும் காலத்தில் வெளிவரும். அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அர்ஜூன் மகேந்திரனைவிடப் பெரிய கனவான்களும் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக நீதிமன்றக் கூண்டில் நிற்பதற்கான கோவைகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதை நான் உங்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

நாட்டு மக்களின் வாக்குப் பலத்திற்கு நடந்தது என்ன? மாகாண சபை முறைமை இல்லாது போய்விட்டது. மீண்டும் மாகாண சபைத் தேர்தல்கள் இல்லை. ஆயிரக்கணக்கான அதிகாரிகள் சம்பளம் பெறுகின்றனர். மாகாண சபை சொத்துக்கள் ரில்லியன் கணக்கில் காணப்படுக்கின்றன. மாகாண சபை முறைமைக்கும் தேர்தலுக்கும் மூடு விழா நடத்தப்பட்டு விட்டது. உயர்நீதிமன்றத்தில் என்னால் விளக்கம் கோரப்பட்டமைக்கமைய நாடாளுமன்றத்தில் உரிய அறிக்கை பிரதமரால் முன்வைக்கப்படாமையினால் மாகாண சபைத் தேர்தல் முடக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டும் அப்படி ஒரு தேர்தல் எப்போது வரும் எனக் கூற முடியாது. அதற்கு முதல் பொறுப்புக் கூற வேண்டியவர் பிரதமரே. ஆகையினால் இம்முறை இந்த பொதுமக்களின் அரசியல் சக்தியை மீண்டும் ஒன்றுதிரட்டி ஒழுக்கப்பண்புடைய வரலாற்று முக்கியத்துவமிக்க பொறுப்பை நிறைவேற்ற வேண்டியது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் முன்னோக்கிப் பயணிக்க எத்தனிக்கும் எமது பொறுப்பாகும்.

இன்று நாட்டுக்குத் தேவையாக இருப்பது நேர்மையான அரசியல் நிகழ்ச்சித் திட்டமொன்றைக் கொண்டுள்ள மக்களை நேசிக்கும் தலைவர்களே ஆகும். தற்போது அரசில் உள்ளவர்களும் எதிர்க்கட்சியில் உள்ளவர்களும் வடக்கிலுள்ள தலைவர்களுடன் இரகசியமாகக் கலந்துரையாடுகின்றனர். அது அடுத்த தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கே ஆகும்.

அரசமைப்பொன்றை உருவாக்குவதாகக் கூறி நான்கரை வருடங்களைக் கடத்தி விட்டார்கள். கோடிக்கணக்கில் செலவிடப்பட்டுள்ளது. நடந்தது ஒன்றுமில்லை. அரசும் எதிர்க்கட்சியும் வழமை போன்று வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டும் வடக்கிலுள்ள தலைவர்களுடன் பேச்சுகளை ஆரம்பித்துள்ளனர். எவருக்குமே நிகழ்ச்சித்திட்டமொன்று கிடையாது.

முன்னாள் ஜனாதிபதிகளைப் போன்று ஏன் உங்களுக்குச் செயற்பட முடியாது? என்று சிலர் என்னிடம் கேட்கின்றனர். நான் ஆறாவது ஜனாதிபதி என்பது உங்களுக்குத் தெரியும். 19ஆவது திருத்தத்தின் மூலம் முன்னாள் ஜனாதிபதிகள் செயற்பட்டதைப் போன்று செயற்படுவதற்கு நான் முற்றுப்புள்ளி வைத்தேன். ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலுக்கு 450 கோடி ரூபாவுக்கும் அதிகம் செலவிடுகின்றார். ஆனால், யார் தெரிவு செய்யப்பட்டாலும் எதிர்காலத்தில் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி 19ஆவது திருத்தத்துக்கு அமைய எதையும் செய்ய முடியாத ஒருவராகவே இருப்பார். அவரிடம் பாதுகாப்பு அமைச்சும் இருக்காது. அந்த அனைத்து அதிகாரங்களும் பிரதமரிடமே இருக்கும்.

இன்று நாட்டு மக்கள் இந்தப் பிரச்சினை பற்றிப் பேசுவதில்லை. ஊடகங்களும் பேசுவதில்லை. இன்று எல்லோரும் ஜனாதிபதி வேட்பாளர் பற்றியே பேசுகின்றனர். ஆனால், 2020இல் நாட்டைப் பொறுப்பேற்பது ஜனாதிபதியன்றி பிரதமரே என்பதை மறந்துவிட வேண்டாம். எனவே, நாம் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் அக்கறையைப் பார்க்கிலும் அடுத்த பிரதமரைத் தெரிவு செய்வதில் அக்கறை காட்ட வேண்டும்.

நான் இந்த நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தினேன். மக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தினேன். அரசின் துப்பாக்கி அரசியல் காரணத்திற்காகவோ, தனிப்பட்ட காரணத்திற்காகவோ நாட்டின் பிரஜை ஒருவரைக் குறிவைக்காத ஒரே யுகம் எனது யுகமாகும் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறேன். வீடுகளுக்கு தீ வைக்கவில்லை, ஊடக நிறுவனங்களுக்குத் தீ வைக்கவில்லை, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு மற்றும் இராணுவத்தினரைக் கொலைகளுக்கும் தவறான நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தவில்லை. இத்தகைய எந்தவொரு குற்றறச்சாட்டும் என் மீது இல்லை. அது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். அந்தச் சாதனையை நான் நிலைநாட்டியிருக்கிறேன்.

எனவே, நீங்கள் சிறந்ததோர் சமூகத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். தூய பௌத்த சமயத்தால் போஷிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலாயர், பறங்கியர் ஆகிய அனைவரும் சமமாக வாழக்கூடிய உரிமையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் உருவாக்க வேண்டும். அந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.

அதேபோன்று நாடு என்ற வகையில் எமது முக்கிய பிரச்சினை வறுமையாகும். வறுமைக்குத் தீர்வாக நாட்டை நேசிக்கும் நேர்மையான அரசியல்வாதிகளும் கல்விமான்களும் நாட்டின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டவர்களும் அதிகம் இருக்க வேண்டும். நாட்டுக்காக அரசியல் செய்கின்றவர்கள் நாட்டை பொறுப்பேற்க வேண்டும். தேசத் துரோகிகளுக்கு எதிராக, காட்டிக்கொடுப்புகளுக்கு எதிராக, ஊழல் பேர் வழிகளுக்கு எதிராக நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் பலம் பெற வேண்டும்.

அண்மையில் இந்த அரசில் உள்ள ஒருவர் குளியாப்பிட்டிய பிரதேசத்துக்குச் சென்று 2015இல் வேட்பாளரைத் தெரிவு செய்வதில் அவர்கள் தவறிழைத்து விட்டனர் என்றும், அதுபோன்று இம்முறை தெரிவு செய்வதில்லை என்றும், அவ்வாறு தெரிவு செய்தால் அவர்களுக்கு வீதியில் செல்லவும் முடியாதிருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நான் அவர்களுக்கு சிலவற்றைக் கூற வேண்டும். அதாவது, நான் அரசில் ஜனாதிபதியாக இருந்ததனால்தான், உள்ளே இருந்து போராடியதனால்தான், வெளியிலும் போராடியதனால்தான் இறுதியில் எதுவுமே செய்ய முடியாதபோது ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி மஹிந்த ராஜபக்சவைப் பிரதமராக ஆக்குவதற்கு நான் தீர்மானம் எடுக்க வேண்டி வந்தது அங்கிருந்த மிக மோசமான நிலைமையாகும். நான் அரசுக்குள் இருந்து நாட்டையும் மக்களையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும் ஊழல், மோசடிகளுக்கு எதிராக நான் போராடி இருக்காவிட்டால் அப்படிக் கூறுகின்றவர்களின் மானங்களை மறைத்துக்கொள்ள உடலில் எதுவும் எஞ்சியிருக்காது. நானே அதனைப் பாதுகாத்திருக்கின்றேன்.

எனவே, நாம் சிறந்ததோர் எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம். எமக்கு சுதேச முற்போக்கான மனிதநேயமிக்க அரசியல் முன்னணியொன்று தேவை. இன்று நாம் ஆரம்பித்திருப்பது அடுத்த ஜனாதிபதித் தேர்தலேயாகும். நாம் இன்னும் சில வாரங்களில் மாவட்ட மாநாடுகளை நடாத்துவோம். கட்சியைப் பலப்படுத்துவோம். மக்கள் நேயமிக்க விரிவான அரசியல் முன்னணியொன்றை அமைப்போம்.

உங்களில் அநேகமானவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் யார்? யாருக்கு நாம் ஆதரவு வழங்கப் போகின்றோம்? எனக் கேட்கின்றனர். நான் அதற்கு வழங்கும் பதில் என்னவென்றால் எமது கொள்கையின்படி 2020இல் அரசை அமைக்கப்போவது நாங்கள்தான் என்பதை உங்களுக்குக் கூறுகின்றேன். அதற்குத் தயாராகுங்கள். நாம் எமது பலத்தைக் காட்டுவோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 68 வருடங்கள். எனக்கும் 68 வருடங்கள். 68 என்பது முதிர்ச்சியாகும். நாம் பெரும் பலத்துடன் கட்சியைக் கட்டியெழுப்பி அடுத்துவரும் ஓரிரு மாதங்களில் நாட்டில் ஓர் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றிகரமானதொரு போராட்டத்தை மேற்கொண்டு 2020இல் புதியதோர் அரசை அமைப்போம். உங்கள் அனைவருக்கும் வெற்றி கிட்டட்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *