மாகாண சபைத் தேர்தலை நடத்தும் அதிகாரம் இல்லை! – ஜனாதிபதிக்கு உயர்நீதிமன்று அறிவிப்பு

நடைமுறையில் இருக்கும் மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் மூலமோ அல்லது முன்னர் நடைமுறையில் இருந்த சட்டத்தின் கீழோ (பழைய முறைமை) மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என்று உயர்நீதிமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளது என்று ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகம் நேற்று விடுத்துள்ள அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிந்துள்ள நிலையில், தேர்தல் நடத்தப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. அதற்குத் தேர்தல் முறைமையில் உள்ள சிக்கலே காரணம் என்று கூறப்படுகின்றது.

மாகாண சபைத் தேர்தல் முறைமை தொகுதி மற்றும் விகிதாசாரம் கலந்த முறைமைக்கு 2017ஆம் ஆண்டு மாற்றப்பட்டிருந்தது. புதிய முறைமையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் தொகுதிகள் பிரிக்கப்பட்டு எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும். அது தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்திருந்தபோதும் அது நாடாளுமன்றில் நிறைவேற்றப்படவில்லை. அதன்பின்னர் எல்லை நிர்ணயம் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் பழைய மற்றும் புதிய முறைமைகளில் தேர்தலை நடத்த முடியாத நிலைமை உள்ளது.

இந்தநிலையில், பழைய தேர்தல் முறைமையிலோ அல்லது புதிய தேர்தல் முறைமையிலோ மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி என்ற ரீதியில் உத்தரவிட முடியுமா? என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்றின் கருத்தைக் கேட்டிருந்தார்.

உயர்நீதிமன்றத்தின் ஐவர் கொண்ட நீதிபதிக் குழாம் அவர்களது ஏகமனதான கருத்தாக மீளாய்வுக் குழு அறிக்கையில்லாமல், மாகாண சபை திருத்தச் சட்டத்தின் சரத்துகளுக்கமைய தேர்தலை நடத்துவதற்காக எல்லை நிர்ணயக் குழுவால் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையின் எல்லை நிர்ணயங்களைப் பிரகடனப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதி வசம் இல்லை என்றும், அதன் காரணத்தால் திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என்றும், அர்த்த விளக்க கட்டளைச் சட்டத்தின் சரத்துகளுக்கமைய அந்தத் திருத்தச் சட்டத்துக்கு முன்னர் நடைமுறையில் இருந்த சட்டத்தின் கீழும் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவந்தால் மட்டுமே மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் எனவும், தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் உயர்நீதிமன்றம் ஜனாதிபதி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தியுள்ளது என்று ‘புதுச்சுடர்’ கடந்த 28ஆம் திகதியன்றே செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *