நிறைவேற்று அதிகார ஒழிப்பு: ‘மொட்டு’க் கட்சியின் பங்காளிகளுடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம்! – கோட்டா கூறுகின்றார்

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்புத் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிகளுடன் பேச்சு நடத்தியே தீர்மானம் எடுக்க முடியும்.”

– இவ்வாறு அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு முன்வரவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்திருந்தார். இந்த யோசனையை ஆதரிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். எனினும், இதனை இப்போது வெற்றிகரமாகச் செயற்படுத்த முடியுமா என்று கேள்வி எழுப்பியிருந்த அவர், தமது ஆட்சிக் காலத்தில் அதனை நிறைவேற்றுவோம் என்றும் கூறியிருந்தார்.

இவ்வாறானதொரு நிலையிலேயே கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிகளுடன் பேச்சு நடத்தியே தீர்மானம் எடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச மேலும் கூறியதாவது:-

“ஜனாதிபதி அறிவிப்பு உத்தியோகபூர்வமாக இதுவரை வெளிவரவில்லை. டிசம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். அதற்குரிய பணிகளில் அனைத்துக் கட்சிகளும் குதித்துள்ளன. ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும், ஜே.வி.பியும் (தேசிய மக்கள் சக்தியும்)தான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

ஐக்கிய தேசிய முன்னணிக்குள் வேட்பாளர் தொடர்பில் இழுபறி தொடர்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் மற்றும் கூட்டணியமைத்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் பேச்சு நடத்தினாலும் இதுவரை அந்தக் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு அறிவிக்கப்படவில்லை.

இந்தநிலையில்தான், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற விவகாரம் சூடுபிடித்துள்ளது. அதுவும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய முன்னணியும் உறுதியாக இருப்பது தெரிகின்றது. இதன் பின்னணி என்னவென்று எனக்குத் தெரியாது.

இந்த விடயத்துக்கு எமது கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச கொள்கையளவில் இணக்கம் தெரிவித்தாரா? இல்லையா? என்பது கூடத் தெரியாது. எனவே, எமது கட்சியின் தலைவர் மஹிந்த இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தித்தான் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும். இது தொடர்பில் நானும், இன்னமும் கட்சியின் தலைவருடன் பேச்சு நடத்தவில்லை. இவ்வாறான நிலையில், என்னால் உத்தியோகபூர்வ கருத்துக்கள் எதனையும் வெளியிட முடியாது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *