ரணிலிடம் சஜித் சரணாகதி! சகாக்களுக்கு வாய்ப்பூட்டு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அக்கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ நேரில் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தியுள்ளார்.

அலரிமாளிகையில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற இந்தப் பேச்சில் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா உட்பட மேலும் இருவர் பங்கேற்றுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய அரசியல் கூட்டணி உதயமாவதிலும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

ரணில் அணி, சஜித் அணி என இரு அணிகளாகப் பிரிந்து நின்று கட்சி உறுப்பினர்கள் சரமாரியாக விமர்சனக்கணைகளைத் தொடுத்து வருகின்றனர். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ரணிலை நேரில் சந்தித்துள்ளார் சஜித்.

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பிலேயே இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது.

இதன்போது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை, ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

“ஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் நாடாளுமன்றக்குழுவும் மத்திய செயற்குழுவுமே தேர்வு செய்ய வேண்டும். அதுவரைக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பொதுவெளியில் எவரும் வீண்விமர்சனங்களை வெளியிடக்கூடாது, கட்சிக்கு அறிவிக்காமல் கூட்டங்களை நடத்தக்கூடாது, ஆதரவு கோரி இதர கட்சிகளுடன் பேச்சு நடத்தக்கூடாது” என்று இதில் கலந்துகொண்ட சஜித் ஆதரவு தரப்புக்குப் பிரதமர் ரணில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ பங்கேற்கவில்லை. இது குறித்து பிரதமருக்கு நேற்றுமுன்தினம் அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.

“நாளைமறுதினம் திங்கட்கிழமை பிரதமர் ரணில் மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்கின்றார். அவர் நாடு திரும்பிய பின்னர் எதிர்வரும் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீண்டும் கூடி முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம்” என்று மேற்படி சந்திப்பில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரான அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *