எந்தக் குற்றச்சாட்டுக்களும் இல்லாத என்னை ஆதரிக்கவேண்டும் மக்கள்! – இப்படிக் கோருகின்றார் அநுரகுமார

“போர்க்குற்றங்களுக்கு உள்ளாகியவர்களுக்கும் ஊழல் மோசடிக்காரர்களுக்கும் வாக்களிப்பதால் எந்தப் பயனும் இல்லை. எந்தவிதமான குற்றச்சாட்டுக்களுக்கும் உட்படாதவன் நான். என்னை ஆதரிக்குமாறு மூவின மக்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன்.”

– இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) நாடாளுமன்ற உறுப்பினரும் ‘தேசிய மக்கள் சக்தி’யின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சர்வதேச ஊடகத்தின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“தமிழ் – முஸ்லிம் மக்கள் எம்முடன் கைகோர்த்தால் என்னுடைய வெற்றி உறுதியாகும். இதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முஸ்லிம்களின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோருடன் திறந்த மனதுடன் பேச்சு நடத்தத் தயாராக இருக்கின்றேன்.

நான் ஆட்சிக்கு வந்தால், வடக்கு – கிழக்கு, மலையக மக்களின் அனைத்துவிதமான பிரச்சினைகளுக்கும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் நேரில் பேசி தீர்வைக் காண்பேன்.

பத்து ஆண்டுகளாக ராஜபக்ச ஆட்சியிலும், நான்கு ஆண்டுகளாக மைத்திரி – ரணில் தலைமையிலான ஆட்சியிலும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கவில்லை. அவர்கள் பல்வேறு வழிகளில் துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். அவர்களின் அடிப்படை பிரச்சினைகள்கூட தீர்க்கப்படவில்லை.

எனவே, எனது ஆட்சியில் இன, மத, மொழி பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமதகுதியுடன் இந்த நாட்டில் வாழும் சூழலை ஏற்படுத்துவேன்.

எந்த நாட்டின் பின்புலத்துடனும் நான் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கவில்லை. தேசிய மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ‘தேசிய மக்கள் சக்தி’யின் வேட்பாளராகவே நான் களமிறங்கியுள்ளேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *