மாகாணத் தேர்தலுக்கு உத்தரவிட ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை! – மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் தெரியப்படுத்தியது எனத் தகவல்

“சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவந்தால் மட்டுமே மாகாண சபைத் தேர்தலை நடத்தமுடியும். தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பிக்க முடியாது.”

– இவ்வாறு உயர்நீதிமன்றம், ஜனாதிபதி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிந்துள்ள நிலையில், தேர்தல் நடத்தப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. அதற்குத் தேர்தல் முறைமையில் உள்ள சிக்கலே காரணம் என்று கூறப்படுகின்றது. மாகாண சபைத் தேர்தல் முறைமை தொகுதி மற்றும் விகிதாசாரம் கலந்த முறைமைக்கு 2017ஆம் ஆண்டு மாற்றப்பட்டிருந்தது. புதிய முறைமையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் தொகுதிகள் பிரிக்கப்பட்டு எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும். அது தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்திருந்தபோதும் அது நாடாளுமன்றில் நிறைவேற்றப்படவில்லை. அதன்பின்னர் எல்லை நிர்ணயம் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் பழைய மற்றும் புதிய முறைமைகளில் தேர்தலை நடத்த முடியாத நிலைமை உள்ளது.

இந்தநிலையில், பழைய முறைமையிலோ அல்லது புதிய முறைமையிலோ மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி என்ற ரீதியில் உத்தரவிட முடியுமா? என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்றின் கருத்தைக் கேட்டிருந்தார். இந்த விடயம் தொடர்பாக கடந்த 23ஆம் திகதி உயர்நீதிமன்றில் ஆராயப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், இந்த விடயம் தொடர்பான கருத்து நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாகாண சபைத் தேர்தலை சட்டத்தில் திருத்தம் ஒன்றை மேற்கொள்வதன் மூலமே நடத்த முடியும். அந்தச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய மாகாண சபைத் தேர்தலுக்கு உத்தரவிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *