போர்க்குற்றவாளிகள் எவரும் இங்கு இல்லை! – சவேந்திர சில்வாவின் பதவியை நியாயப்படுத்துகிறார் மைத்திரி 

“இலங்கையின் பாதுகாப்புத்துறையில் போர்க்குற்றவாளிகள் என்று எவரும் இல்லை. ஒருவரைப் பழிவாங்கும் நோக்கத்தில் போர்க் குற்றங்களைச் சுமத்துவதால் அவர் போர்க் குற்றவாளிகள் என்று அர்த்தமில்லை.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இலங்கையின் இராணுவத் தளபதியாக அண்மையில் லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டார். அவரது நியமனம் சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது. லெப். ஜெனரல் சவேந்திர சில்வா இறுதிப் போரின்போது நடைபெற்றன என்று கூறப்படும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர் என்று பலராலும் சுட்டிக்காட்டப்பட்டவராவார். போரின் இறுதியில் இராணுவத்தினரால் இழைக்கப்பட்டன என்று கூறப்படும் பல மனித உரிமை மீறல்கள் இவரின் கட்டளையின் கீழேயே நடைபெற்றன என்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இறுதிப் போர் நடைபெற்ற காலத்தில் 53ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா செயற்பட்டார். லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கிய 58ஆவது படையணியிடமே தமது உறவுகள் கையளிக்கப்பட்டனர், அவர்கள் காணாமல் போயுள்ளனர் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனினும், எதிர்ப்புக்களைக் கருத்தில்கொள்ளாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தார்.

புதிதாகப் பதவியேற்ற லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தார். கடமைகளைப் பொறுப்பெற்றதும் ஜனாதிபதியைச் சந்திக்கும் ஒரு சம்பிரதாயச் சந்திப்பே இதுவென்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று வினவியபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியிலும், பாதுகாப்புப் படைகளின் தலைவர் என்ற ரீதியிலும் எனது பணிகளை நேர்த்தியாக முன்னெடுத்துச் செல்கின்றேன். எவரையும் பழிவாங்கும் நோக்கம் எனக்கில்லை.

ராஜபக்ச குடும்பத்தினரின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நான் செயற்படுகின்றேன் என்று சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். ராஜபக்ச குடும்பம் என்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யவில்லை. இலங்கையில் உள்ள மூவின மக்களே என்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தனர். அந்த மக்களின் மனங்களை நான் வெல்லக் கூடாது என்பதில் சிலர் முனைப்பாக இருக்கின்றனர். அதுதான் எனது பதவியையும் கருத்தில் கொள்ளாது அநாகரிகமான முறையில் திட்டித்தீர்க்கின்றனர்.

இதற்கெல்லாம் நான் வெட்கப்பட்டோ அல்லது அச்சப்பட்டோ போக மாட்டேன். நாட்டின் பாதுகாப்புத் துறையில் இராணுவத்தின் பங்களிப்பு அளப்பெரியது. இதனைக் கருத்தில் கொண்டே போர்க்களத்தில் திறமையாகச் செயற்பட்ட சவேந்திர சில்வாவை புதிய இராணுவத் தளபதியாக நியமித்தேன்.

சவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு எதிராக உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் சிலர் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகின்றனர். திறமையான ஒருவர் பதவிக்கு வந்தால் அவருக்கு எதிராக விமர்சனங்கள் வருவது வழமையே. அவற்றை நாம் கருத்தில் எடுக்கத் தேவையில்லை.

இலங்கையின் பாதுகாப்புத் துறையில் சவேந்திர சில்வாவோ அல்லது வேறு படை அதிகாரிகளோ போர்க்குற்றவாளிகள் இல்லை. பாதுகாப்புத் துறையில் உள்ள அனைவரும் தம்மை முழுமையாக இந்த நாட்டுக்கு அர்ப்பணித்து வருகின்றனர்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *