வெள்ளிக்கிழமை யாழ். செல்கின்றார் மைத்திரி! – ஒரே நாளில் 8 நிகழ்வுகளில் பங்கேற்பார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ வேலைத்திட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகவே அவர் யாழ்ப்பாணம் செல்கின்றார். யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் அவர் ஒரே நாளில் 8 நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நிகழ்வு யாழ்ப்பாணத்திலும், பிரதேச செயலகங்கள் ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நிகழ்வின் இறுதிநாள் நிகழ்வு நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அதில் பங்குகொள்வதற்காகவே மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளார். அன்று யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களையும் அவர் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

காலை 9.30 மணிக்கு பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்துக்கான அடிக்கல்லை மைத்திரிபால சிறிசேன நடுவார். தொடர்ந்து அலுவலகம் ஒன்றையும் அங்கு திறப்பார். காலை 10 மணிக்கு  யாழ்ப்பாண மாவட்டக் குடி தண்ணீர்ப் பிரச்சினையை தீர்ப்பதற்காக வடமராட்சியில் அமைக்கப்பட்டவுள்ள பெரும் நீர்த் தேக்கத்துக்கான வேலைகளையும் ஆரம்பிப்பார்.

முற்பகல் 10.30 மணிக்கு, சுன்னாகம், திண்ணை இயற்கை விவசாயப் பண்யையில் இடம்பெறும் தேசிய நீர் இணைப்புக்கான ஒன்றுகூடலில் கலந்துகொள்வார். முற்பகல்  11 மணிக்கு யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையில் அமைக்கப்பட்ட கட்டடத்தைத் திறப்பார். முற்பகல்  11.30 மணிக்கு யாழ்ப்பாணம் பழைய கச்சேரிக்கு அண்மையில் அமைக்கப்பட்ட ஸ்மாட் சிறிலங்கா கட்டத்தைத் திறப்பார்.

பிற்பகல் 2.15 மணிக்கு கைதடியில் அமைக்கப்பட்ட வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியைத் திறப்பார். பிற்பகல்  3 மணிக்கு  யாழ்ப்பாணம் முற்றவெளியில் நாட்டுக்காக ஒற்றிணைவோம் நிகழ்ச்சித் திட்ட மக்கள் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *