சிறுபான்மையினர் மீதான வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை அசமந்தம்! – ஐ.நா. விசேட அறிக்கையாளர் சுட்டிக்காட்டு

“இலங்கையில் கடந்த காலங்களில் சிறுபான்மையினச் சமூகத்தவருக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது, அரசு அதைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவில்லை.”

– இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் அஹ்மட் ஷஹீட் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த அவர் தனது பயணத்தின் இறுதி நாளான நேற்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையின் அரசமைப்பின்படி பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை சர்வதேச சட்டங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அரசு நாட்டில் வாழ்கின்ற பிற மதங்களைப் பின்பற்றும் மக்களைப் பக்கச்சார்பின்றி நடத்துவதுடன் அவர்களது உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாத்து உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

அரச தலைவர்களும், மதத் தலைவர்களும் வெறுப்புணர்வுப் பேச்சுக்கள் மற்றும் செயற்பாடுகள் என்பவற்றுக்கு எதிரான தமது நிலைப்பாட்டைப் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட, பின்தள்ளப்பட்ட சமூகத்துடனான தமது ஒருமைப்பாட்டை வெளிக்காட்டும் வகையில் செயற்பட வேண்டும்” – என்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மதச் சுதந்திரம் தொடர்பான விசேட அறிக்கையாளர் அஹ்மட் ஷஹீட் கடந்த 15ஆம் திகதி உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்தார். அவர் இலங்கையில் மதச் சுதந்திரம் தொடர்பாக உள்ள நிலைவரத்தை ஆராய்ந்திருந்தார்.

கொழும்புக்கும் வடக்கு, வடமேல், கிழக்கு, மத்திய மாகாணங்களின் பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்ற ஷஹீட் அங்கு மதம் சார்பான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், மதத்தலைவர்கள், முறைப்பாட்டாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உட்பட பல தரப்பினரையும் சந்தித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *