பலாலி விமான நிலையம் ஒக்டோபர் 15 இல் திறப்பு! – அன்றே இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பம்

பலாலி விமான நிலையம் எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.

எளிமையான வகையில் நடக்கவுள்ள இந்தத் திறப்பு விழா நிகழ்வை அடுத்து, இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.

பலாலி விமான நிலையத்தில் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கூட்டம் நேற்றுக் காலை அலரிமாளிகையில் நடைபெற்றது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் பின்னர் ‘ரைம்ஸ் ஒன்லைன்’ ஊடகத்துக்கு கருத்து வெளியிடும்போது பிரதமர் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

விமான நிலையக் கட்டுமானப் பணிகள் 30 வீதத்துக்கு மேல் நிறைவடைந்துள்ளன என்றும், மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் இணைப்புகள் இன்னும் பெறப்படவில்லை என்றும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

எனினும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நீர் வழங்கல் ஆதாரம் விமான நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருப்பதால் நீர் வழங்கலைப் பெறுவதில் சிக்கல் இருக்கின்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்கக் கடற்படையின் உதவியுடன் கடல் நீரைச் சுத்திகரித்துப் பயன்படுத்தலாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைத்தார்.

அதேவேளை, விமான நிலையத்தில் சுங்க, குடிவரவுச் செயலகங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *