மாகாண சபைத் தேர்தல் குறித்து உயர்நீதிமன்ற விசாரணை நிறைவு! – வியாக்கியானம் விரைவில் ஜனாதிபதிக்கு

மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்ப ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.

எல்லை நிர்ணய அறிக்கை இன்றி மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பது குறித்து உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாட்டைக் கோரி ஜனாதிபதி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நேற்று நிறைவு செய்த நீதியரசர்கள் குழு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிகாரே, சிசிர டி ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எல்லை நிர்ணய அறிக்கையுடனோ அல்லது அறிக்கை இன்றியோ மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான இயலுமை குறித்து உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்கு ஜனாதிபதிக்கு எவ்வித உரிமையும் இல்லை என மனுவின், இடை மனுதாரரான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் நீதியரசர்கள் குழாமுக்கு அறிவித்துள்ளார்.

இந்த விடயத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவே ஆராய வேண்டும் எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2017ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபை சட்டம் தற்போது நடைமுறையில் காணப்படுவதாக சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையாகிய மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் இந்திக தெமுனி த சில்வா மன்றுக்கு அறிவித்துள்ளார்.

அதற்கமைய, எல்லை நிர்ணய நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தால் முன்னெடுக்கப்படுகின்றமையை சுட்டிக்காட்டிய மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல், எல்லை நிர்ணய நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் உடன்பட்டுள்ளன. இது தொடர்பில் தன்னால், தனிநபர் சட்டவரைவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *