நான் நிச்சயம் போட்டியிடுவேன்; எல்லோரையும் ராஜாவாக்குவேன்! – மாத்தறை மக்கள் பேரணியில் சஜித் சூளுரை

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிடுவேன். நான் மாளிகையில் வாழ்வதற்கல்ல, நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களையும் ராஜாவாக்குவதற்காகவே ஜனாதிபதியாகுகின்றேன். எனது தந்தை போல் பொதுமக்களுடன் கைகோர்த்து மரணத்தைத் தழுவவுள்ளேன்.”

– இவ்வாறு தெரிவித்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவைக் களமிறக்குமாறு கோரி மாத்தறையிலுள்ள சனத் ஜயசூரிய மைதானத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“எவரும் எவ்வகையிலும் சந்தேகம்கொள்ள வேண்டாம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ களமிறங்குவது உறுதி எனக் கூறுகின்றேன்.

நாட்டை முன்னேற்றும், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யும் தலைவர் ஒருவரையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். அன்பான மக்களே! எமது நாட்டுக்கு அந்த தலைமைத்துவத்தை நான் பெற்றுக் கொடுப்பேன் என்பதை இவ்வேளையில் கூறுகிறேன்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டமொன்றை, பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் திட்டமொன்றை, நாட்டை ஒன்றுபடுத்தும் திட்டமொன்றை முன்வைக்கவே நாம் எதிர்பார்க்கின்றோம். எதிர்வரும் நவம்பர் மாதம் நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்போது, ‘ஸ்ரீலங்கன் பெஸ்ற்’ என்ற திட்டத்தை முன்னெடுப்போம் என்பதை கூறுகின்றேன்.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஏற்படுத்தும் இந்த மாற்றத்தின் நோக்கம், மக்கள் கழுத்தேறிச் சென்று மாளிகைகளில் சொகுசு வாழ்க்கை வாழ்வதல்ல. உங்களுக்கு சஜித் பிரேமதாஸ ஒரு வாக்குறுதியளிக்கின்றார். உங்கள் சஜித் பிரேமதாஸவை மாளிகையில் காண முடியாது. எனினும், இந்த நாட்டிலுள்ள 42 ஆயிரம் சிறிய கிராமங்களில் என்னை உங்களால் காண முடியும். 14 ஆயிரம் கிராமசேவகர் பிரிவுகளிலும் என்னைக் கண்டுகொள்ள முடியும்.

இந்த நாட்டிலுள்ள 61 இலட்சம் குடும்பங்களையும், 220 இலட்சம் மக்களையும் அரசர்களாக்கும் – ராஜாக்களாக்கும் யுகத்துக்கு நான் கொண்டு செல்வேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *