மைத்திரி – கோட்டா இரகசியச் சந்திப்பு! – பேசப்பட்ட முக்கிய விடயங்களை மூடிமறைக்க இருவரும் இணக்கம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் முக்கியமான சந்திப்பு சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் இரகசியமாக நடைபெற்றுள்ளது.

தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து இருவரும் மனம்விட்டுப் பேசியுள்ளனர். இதன்போது பல முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அந்தத் தீர்மானங்களை இப்போதைக்குப் பகிரங்கப்படுத்தாதிருக்கவும் இருவரும் உடன்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் அரசியல் கூட்டணி அமைக்க நடந்துவரும் பேச்சுக் குழுவின் உறுப்பினர்களை மாற்றியமைக்க இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதன்படி மஹிந்த தரப்பில் பேச்சுக் குழுவுக்கு பஸில் ராஜபக்ச தலைமை வகிப்பார் எனத் தெரிகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தமக்கு நெருக்கமான சிலரை மைத்திரி பெயரிடவுள்ளார் என அறியமுடிந்தது.

இந்தச் சந்திப்பின் பின்னரே கொழும்பு ஷங்ரி – லா ஹோட்டலில் கோட்டாபய வழங்கிய இரவு விருந்துபசாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள மைத்திரி அனுமதித்தார் எனவும் தெரியவந்தது.

தாம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் மைத்திரிக்கு உரிய அந்தஸ்தை வழங்க கோட்டா இதன்போது உத்தரவாதம் அளித்தார் எனவும் மேலும் அறியமுடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *