கோட்டாபய பழைய கஞ்சி; அநுரகுமார பழைய சாதம்! – உரிய வேளையில் ஐ.தே.கவின் வெற்றி வேட்பாளரை அறிவிப்போம் என்கிறார் மனோ

“எங்கள் வேட்பாளரை இன்று முழு நாடும் “யார் அவர், யார் அவர், யார் அவர்” எனத் தேடுகின்றது. இதுவே எங்கள் வெற்றிக்கரமான இராஜதந்திரம். இன்று கோட்டா பழைய கஞ்சி. அநுர பழைய சாதம். முழு நாட்டின் அவதானத்தையும் எம் பக்கம் நாம் இன்று திருப்பி உள்ளோம். உரிய வேளையில் எமது வெற்றி வேட்பாளரை நாம் அறிவிப்போம். ஆனால், அந்த அறிவிக்கும் வேலையை நாமே தீர்மானிப்போம்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபயவின் குடியுரிமை விவகாரம், ஒரு சட்ட விவகாரம். அதை அமெரிக்க அரசும், இலங்கை தேர்தல் ஆணையகமும், தேர்தல் கண்காணிப்பு குழுக்களும் பார்த்துக்கொள்ளட்டும். அந்தக் குடியுரிமைப் பிரச்சினையைக் கட்டிப்பிடித்துக்கொண்டும், தூக்கிப்பிடித்துக்கொண்டும் நாம் அரசியல் செய்ய முடியாது. அப்படிச் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை” என்றும் நேற்றிரவு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற சிங்கள மொழியிலான அரசியல் கலந்துரையாடல் நிகழ்வில் அமைச்சர் மனோ குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உதய கம்மன்பில, இந்திக அனுருத்த மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் கலந்துக்கொண்ட இந்த சிங்கள மொழியிலான விவாதத்தில் அமைச்சர் மனோ மேலும் கூறியதாவது:-

“உருவாகிவரும் எங்களது ஜனநாயக தேசிய முன்னணிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான வித்தியாசம் என்ன தெரியுமா? அது புரிந்துகொள்ள மிகவும் இலகுவானது. ஆனால், அதை உங்களில் பலர் புரிந்துக்கொள்ளத் தவறுகிறீர்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையில் இருப்போர் ஓர் குடும்ப அங்கத்தவர்கள். எமது ஜனநாயக தேசிய முன்னணி தலைமையில் இருப்போர் பல கட்சிகளின் அங்கத்தவர்கள். ஆகவே, உங்கள் தலைமை குடும்பமான ராஜபக்ச குடும்பத்தில்தான் ஒருவரை நீங்கள் வேட்பாளராகப் போட வேண்டும். போட்டும் உள்ளீர்கள். இனி வருங்காலத்தில் ஒருவேளை நீங்கள் வென்றால், பிரதமர் மற்றும் பிரபல அமைச்சர்கள் எல்லோருமே ராஜபக்ச குடும்ப அங்கத்தவர்கள்தான். இந்தக் குடும்பத்துக்கு வெளியே தகுதியானவரைத் தேடிப் பார்க்க உங்களால் முடியாது. அதுதான் உங்கள் ஜனநாயகம்.

ஆனால், நாங்கள் எங்களது ஜனநாயக தேசிய முன்னணியிலே, கட்சி அங்கத்தவர்களில் இருந்தே தகுதியானவரை நாம் தேடி நியமிக்கின்றோம். இதுதான் எங்கள் ஜனநாயகம். குடும்பமா? கட்சியா? எங்கே ஜனநாயகம் உள்ளது? என்பதைத் தேடிப்பாருங்கள். அதற்காக ஒரே குடும்பத்தில் இருந்து பலர் அதே கட்சிக்கு உள்ளே வருவதை நான் மறுக்கவில்லை. தென்னாசியாவில் இது வழமை. உலகிலும் பல நாடுகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் ஒரே கட்சியில் இருக்கின்றார்கள். இந்த விடயமோ அல்லது உங்கள் வேட்பாளர் கோட்டாபயவின் இரட்டைக் குடியுரிமை பிரச்சினையையோ எனக்கு முக்கியமில்லை.

ஒரே குடும்பம் என்பதால்தான் உங்களால் தாமதமில்லாமல் வேட்பாளரை அறிவிக்க முடிந்தது. இதே காரணத்தால்தான் நாம் இன்னமும் எமது வேட்பாளரை அறிவிக்கவில்லை. இது ஒரு ஜனநாயக தாமதம். இதைப் புரிந்துகொள்ளுங்கள்.

நான் பகிரங்கமாக உங்கள் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஜே.வி.பி. வேட்பாளர் நண்பர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் வாழ்த்துக்களை ஏற்கனவே கூறியுள்ளேன். எனக்கு உங்கள் எவருடனும் தனிப்பட்ட விரோதம் கிடையாதே. நான் அரசியல் முரண்பாடுகளை உடம்பில், தலையில் ஏற்றிக்கொள்வது இல்லை. ஆகவே, மனப்பூர்வாக வாழ்த்துகின்றேன். இது என் தனிப்பட்ட கலாசாரம். ஆனால், அரசியலில் நமது கட்சி இருக்கும் இடம் வேறு. அது என் அரசியல் கலாசாரம்.

எங்கள் வேட்பாளரை இன்று முழு நாடும் “யார் அவர், யார் அவர், யார் அவர்” எனத் தேடுகின்றது. இன்று கோட்டா பழைய கஞ்சி. அநுர பழைய சாதம். எமது வேட்பாளரை அறிந்துகொள்ள நாடு விரும்புகின்றது. முழு நாட்டின் அவதானத்தையும் எம் பக்கம் நாம் இன்று திருப்பி உள்ளோம். உரிய வேளையில் எமது வெற்றி வேட்பாளரை நாம் அறிவிப்போம். ஆனால், அந்த அறிவிக்கும் வேலையை நாமே தீர்மானிப்போம்.

இங்கே இம்முறை வேட்பாளரைப் பெயரிடும் சந்தர்ப்பத்தை நாம் விரும்பி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கி உள்ளோம். 2010, 2015 வருடங்களில் வெளியில் இருந்து வேட்பாளர் வந்த காரணத்தால், இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளே இருந்து வேட்பாளர் வருவது மிகவும் நியாயமானது. இதை நானே முதலில் கூறினேன். ஆகவே, ஐ.தே.க. பெயரிடும் வேட்பாளரை நாம், ஜனநாயக தேசிய முன்னணி தலைமை குழுவில் அங்கீகரிப்போம். இங்கு இப்போது ரணில், சஜித், கரு ஆகிய மூன்று பெயர்கள் பேசப்படுகின்றன. எவர் வந்தாலும் அவர் வெறும் வேட்பாளர் மட்டுமல்ல. அவர் எங்கள் டீம் லீடர். இங்கே டீம் என்ற தலைமைக்குழு முக்கியமானது. நாம் ரணில் ஆட்சிக்கு, சஜித் ஆட்சிக்கு, கரு ஆட்சிக்கு வித்திடவில்லை. எமக்குத் தேவை சட்டத்தின் ஆட்சியே” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *