சவேந்திர சில்வா விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக்கூடாது! – ரியர் அட்மிரல் வீரசேகர அமெ. தூதருக்குக் கடிதம்

“நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்துக்கு விசனம் தெரிவித்து கருத்துக்களை வெளியிடுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும். எனவே, இலங்கை இராணுவம் தொடர்பில் இத்தகைய கருத்துக்களை வெளியிடுவதிலிருந்து அமெரிக்கத் தூதரகம் விலகியிருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸுக்கு ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கடிதமொன்றை நேற்று அனுப்பிவைத்துள்ளார்.

லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவை புதிய இராணுவத் தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்ததைத் தொடர்ந்து, அதற்கு எதிராக சர்வதேச சமூகத்தில் பெரும் எதிர்வலை தோன்றியுள்ளது. இந்த நியமனத்துக்கு அமெரிக்கா முதல் நாடாகத் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையும் கவலை வெளியிட்டிருந்தது. இந்த நிலையிலேயே சரத் வீரசேகர இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கின்றார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

“இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமையானது மிகுந்த கவலையளிக்கின்றது எனவும், சவேந்திர சில்வாவுக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்ற நிலையில் அவரது இந்த நியமனம் இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் நன்மதிப்பையும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக்குகின்றது எனவும் அமெரிக்கா கூறியிருக்கின்றது.

சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எவையும் இன்னமும் நிரூபிக்கப்படாத நிலையிலேயே அவருடைய நியமனம் தொடர்பில் இத்தகைய கருத்துக்கள் கூறப்படுகின்றன. இவை யாவும் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஐக்கிய நாடுகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மையப்படுத்தியவையாகவே அமைந்துள்ளன.

அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்த 8 குற்றச்சாட்டுக்களுக்கும் எதிரான ஆதாரபூர்வமான வாதங்களை உள்ளடக்கியதாக கடந்த 2017ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆவணமொன்றைச் சமர்ப்பித்திருக்கிறேன்.

இந்தநிலையில், சவேந்திர சில்வா இன்னமும் இராணுவத்தில் சேவையாற்றிக் கொண்டிருப்பவர் என்ற காரணத்தினாலேயே அமெரிக்காவினால் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பிறிதொரு நாட்டு விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் தனிநபர் போன்றோ அல்லது அரச சார்பற்ற நிறுவனம் போன்றோ அமெரிக்கா நடந்துகொள்ளக் கூடாது. ஏதேனும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாயின் சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கைகளை ஆதாரமாகக் காட்டவேண்டும்.

அவ்வாறு இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொருத்தப்பாடுடைய சர்வதேச அறிக்கையாக ஐக்கிய நாடுகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை மாத்திரமே காணப்படும் நிலையில் அதுவும் குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமான நிரூபிப்பதற்குத் தவறிவிட்டது.

எனவே, அத்தகைய நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இராணுவத் தளபதி குறித்த கண்டனங்களை வெளியிடுவது நியாயமற்றதாகும்.

இலங்கை இராணுவம் தொடர்பில் இத்தகைய கருத்துக்களை வெளியிடுவதிலிருந்து அமெரிக்கத் தூதரகம் விலகியிருப்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *