ஜனாதிபதி வேட்பாளராக களத்தில் குதிக்கத் தயார்! – ஹிஸ்புல்லா அதிரடி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் மக்கள் சார்பில் களமிறங்குவதற்கு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா திட்டமிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளை உலகத்திற்கு ஓரணியில் நின்று எடுத்துச் சொல்லவும், இரு பிரதான கட்சிகளின் மீதான முஸ்லிம் மக்களின் நம்பிக்கையின்மையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தவும் இவ்வாறு அவர் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று தெரியவருகின்றது.

இது தொடர்பில் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளேன். புத்திஜீவிகள், இளைஞர்கள் எல்லோரும் களமிறங்குங்கள் என்று கூறுகின்றனர். இது தொடர்பாக தொடர்ந்து பேசிக்கொண்டுள்ளனர். நேற்றும் மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள், சமூக மட்டங்களைச் சேர்ந்தவர்கள், முஸ்லிம்கள் என்று ஏராளமானவர்கள் கேட்டுள்ளனர். வற்புறுத்துகின்றனர். எனினும், இது தொடர்பில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு சில நாட்களில் தீர்மானிப்பேன்” – என்றார்.

எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவும், மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து அநுரகுமார திஸாநாயக்கவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியில் இருந்து வேட்பாளர்கள் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமான அறிவித்தல்கள் வரவில்லை. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பலமுனைப் போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில் வாக்குகள் சிதைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறனதொரு நிலையில் ஹிஸ்புல்லாவும் களமிறங்குவார் என்ற பேச்சுக்களும் வெளிக்கிளம்பியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *