கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் தொடர்ந்தும் ஏன் இராணுவ ஆக்கிரமிப்பில்? – சபையில் சிறிதரன் எம்.பி. கேள்வி

“கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை ஏன் இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பில் வைத்துள்ளீர்கள். இந்த நாடு ஜனநாயக நாடு என்பதையும் இலங்கையில் இராணுவ ஆட்சி இல்லை என்பதையும் அரசு ஏற்றுகொள்ளத் தயாரா?”

– இவ்வாறு கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

நாடாளுமன்றில் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“முன்பள்ளி மாணவர்களின் சீருடைகளில் ஒவ்வொரு இராணுவ படையணியின் இலட்சினை பொறிக்கப்படுகின்றது. இது குறித்த படங்களை நான் சபாபீடத்தில் சமர்ப்பித்துளேன். ஆதாரங்கள் தேவைப்படும் நேரங்களில் மேலும் ஒளிப்படங்களைச் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளேன். இலங்கையில் மற்ற எந்த மாவட்டங்களிலும் இல்லாத நிலைமை ஏன் கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்களில் உள்ளது?. கல்வி அமைச்சின் மூலமாக செய்யவேண்டிய வேலையை ஏன் இராணுவம் மூலம் செய்யப் பார்க்கிறீர்கள் என்பதே எனது கேள்வி. இலங்கை ஜனநாயக நாடு என்பதையும் இலங்கை இராணுவ ஆட்சி இல்லாத நாடு என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளீர்களா?

கிளிநொச்சி முல்லைத்தீவை மட்டும் ஏன் இன்னமும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளீர்கள். அரச தலைவர் செயலணிக் கூட்டத்தில் இதனை பேசியுள்ளோம். பிரதமரிடத்தில் நாம் உரிய காரணிகளை முன்வைத்துள்ளோம். ஆனால், இதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாக தெரியவில்லை.

கல்வி அமைச்சின் மூலமாக முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டத்தை ஏன் இராணுவம் முன்னெடுத்து வருகின்றது? முன்பள்ளி ஆசிரியர்கள் இராணுவக் கண்காணிப்பில் நடத்தப்படுகின்றனர். இது ஜனநாயக செயற்பாடு அல்ல” – என்றார்.

இதற்கு பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன,

“முன்பள்ளி வேலைத்திட்டம் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதை வடக்கு மாகாண அங்கீகாரத்துடன் முன்னெடுத்து வருகின்றோம். ஆனால், சீருடைகளில் இலட்சினை இருப்பது குறித்து எனக்கு தெரியவில்லை. நாம் இது குறித்து ஆராயத் தயார்” – என்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இலக்கம் 882, ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சியில் உள்ள சிறிதரனின் சொந்தக்காணியிலுள்ள வீட்டில் நேற்று அதிகாலையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் குவிந்து சோதனைகளை நடத்தினர். இது குறித்தும் கருத்துத் தெரிவித்தார் சிறிதரன்.

“எனது காணி மற்றும் வீட்டை சுற்றிவளைத்து எனது வீட்டுக்காணியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த ஆயுதங்களை மீட்க வந்துள்ளதாகவும், எனவே எனது காணியின் கதவுகளை திறக்குமாறு கூறியுள்ளனர். எனது காணியைப் பராமரிக்கின்ற சண்முகநாதன் என்பவரை கிராம அலுவலரின் உதவியோடு அவரின் வீட்டுக்குச் சென்று அழைத்து வந்து எனது வீட்டின் கதவுகளையும் திறக்குமாறு கூறியுள்ளனர். இந்தச் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கை தொடர்பில் எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

நான் ஏற்கனவே பல்வேறு கட்டங்களில் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டுள்ளேன். இப்போதுகூட இந்தச் சோதனை நடவடிக்கையானது என்னுடைய நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறுகின்ற செயலாகவே உள்ளது. இதுவும் என் மீதான அச்சுறுத்தலாகவே உள்ளது” – என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *