அநுர மிகப் பொருத்தம்! – மாவை எம்.பி. பாராட்டு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க பொருத்தமானர்தான் என்று தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான ‘தேசிய மக்கள் சக்தி’ கூட்டணி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். 20 ஆண்டுகளின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி போட்டியிடவுள்ளது. அது கல்வியலாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், அரசியல் கட்சிகள் என 28 அமைப்புக்களை இணைத்துக் களமிறங்கவுள்ளது.

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜாவிடம் கருத்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மக்கள் விடுதலை முன்னணியினர் இடதுசாரித்துவச் சிந்தனையைக் கொண்டவர்கள். கிராம மக்கள் மத்தியிலும், அறிஞர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் ஒரு புதிய குரலாக பரந்து உயர்ந்து வந்தவர்கள். அவர்களும் ஒரு காலத்தில் ஆயுதம் எடுத்து புரட்சி செய்து எத்தனையோ போராட்டங்கள் நடத்தியவர்கள். நாட்டைத் தாங்கள் ஆட்சி செய்ய வேண்டும், ஆயுதமெடுத்துப் போராடி ஆட்சி செய்யவேண்டும் என்று தீர்மானித்துப் போராடி பலருடைய உயிர்களை இழந்தவர்கள். பல உயிர்களும் பறிகொடுக்கப்பட்டன.

இப்போது அவர்கள் ஜனநாயக ரீதியில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பமொன்றில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு அநுரகுமார திஸாநாயக்க பொருத்தமானவர். அவருக்கு நாங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *