போர்க்குற்றச்சாட்டுக்குள்ளான சவேந்திரவை இராணுவத் தளபதியாக நியமித்தார் மைத்திரி!

இலங்கையின் 23ஆவது இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இராணுவத் தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதியால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை இராணுவப் பணிக்குழாம் பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா செயற்பட்டு வந்த நிலையில், இன்று இவர் லெப்டினன்ட் ஜெனரலாகப் பதவியுயர்த்தப்பட்டு இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

1984ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்ட சவேந்திர சில்வா, தமிழீழ விடுதலைப்புலிகளுடனான இறுதிப் போரின்போது, 58ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்டிருந்தார். இவருக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வீர விக்கிரம பதக்கம், உத்தம சேவா பதக்கம், ரண விக்கிரம பதக்கம், ரண சூர பதக்கம் ஆகிய விருதுகளை இவர் பெற்றுள்ள போதிலும், இறுதிப் போர்க்கால சர்ச்சைக்குரியவரான இவருக்குப் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளமையால் பல்வேறு தரப்பினரும் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சொந்தக் கட்சியின் (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி) உறுப்பினர்களிடமிருந்தும் எதிர்ப்புகளை எதிர்கொண்டுள்ளார். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும் இந்த விவகாரத்தில் முரண்பட்டு நிற்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக சவேந்திர சில்வாவின் பதவியுயர்வு, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியான ராஜபக்ச அணியின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *