என்ன குற்றம் செய்தனர் ராஜபக்ச குடும்பத்தினர்? – எம்மை விமர்சிப்பதை உடன் நிறுத்துங்கள் என்று கோருகின்றார் கோட்டா

“தமிழ்ப் பயங்கரவாதிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டை மீட்டெடுத்தது ராஜபக்ச குடும்பம். அப்படிப்பட்ட ராஜபக்ச குடும்பத்தினரை குற்றவாளிகள் என்று அரசியல்வாதிகள் சிலர் கண்டபடி விமர்சிக்கின்றார்கள். நாம் உண்மையில் என்ன குற்றம் செய்தோம்? எம்மை விமர்சிப்பதை உடன் நிறுத்துமாறு குறித்த அரசியல்வாதிகளிடம் வேண்டிக்கொள்கின்றேன்.”

– இவ்வாறு அச்சுறுத்தல் பாணியில் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நானே. எனக்கு மாற்றீடாக எமது கட்சியிலிருந்து எவரும் களமிறங்கமாட்டார்கள். வீண் வதந்திகளை எவரும் நம்பவே வேண்டாம். வடக்கு – கிழக்கு – மலையகம் என நாடெங்கிலும் பரந்து வாழும் தமிழ்பேசும் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எமது ஆட்சியில் தீர்வைப் பெற்றுக்கொடுப்பேன்.

என்னைத் தமிழ்பேசும் மக்களின் எதிரியாகக் சித்தரித்துக்காட்ட காட்ட அரசியல்வாதிகள் சிலர் முயற்சிக்கின்றார்கள். தமிழ்ப் பயங்கரவாதிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டை மீட்டெடுத்தது ராஜபக்ச குடும்பம். இப்படிப்பட்ட ராஜபக்ச குடும்பத்தினரை குற்றவாளிகள் என்று குறித்த அரசியல்வாதிகள் கண்டபடி விமர்சிக்கின்றார்கள். நாம் உண்மையில் என்ன குற்றம் செய்தோம்? எம்மை விமர்சிப்பதை உடன் நிறுத்துமாறு குறித்த அரசியல்வாதிகளிடம் வேண்டிக்கொள்கின்றேன்.

எந்தத் தடைகள் வந்தாலும் அதனைத் தகர்த்தெறிந்து அரச தலைவர் தேர்தலில் நான் வெல்வது உறுதி. இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் பாதுகாவலனாக – நல்லதொரு தலைவனாக நான் இருப்பேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *