இன்றும் நாளையும் வடக்கில் ரணில்!

ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபித்துள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கக இன்று வவுனியாவுக்குச் செல்கின்றார். அவருடன் ஐ.தே.க வின் அமைச்சர் குழுவினரும் செல்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இருநாள் பயணமாக வடக்கு மாகாணத்துக்குச் செல்லும் பிரதமர் இன்று வவுனியாவிலும், நாளை யாழ்ப்பாணத்திலும் பல திட்டங்களை ஆரம்பித்து வைக்கக்கவுள்ளார்.

வவுனியாவுக்குச் செல்லும் பிரதமர், வவுனியா பொது வைத்தியசாலையில் இரண்டாவது சுகாதாரத்துறை மேம்படுத்தல் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை மக்கள் பயன்பாட்டுக்குக் கையளிக்கவுள்ளார். அத்துடன் நெதர்லாந்து அரசால் வழங்கப்படவுள்ள, இலகுக் கடன் உதவியில் அமைக்கப்படவுள்ள இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவுக்கான அடிக்கல்லையும் நடவுள்ளார்.

இந்த நிகழ்வுகளில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின, நெதர்லாந்துத் துணைத் தூதுவர் ஈவா வான்வோசம், வடக்கு மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

பிரதமர் வருவதையிட்டு வவுனியா பொது வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களின் தகவல்கள் மற்றும் அதன் உரிமையாளர், பணிபுரிபவர்களது தகவல்கள் பெறும் நடவடிக்கை நேற்று சிவில் உடை தரித்த பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை யாழ்ப்பாணத்துக்கும் செல்லவுள்ளார். யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் அவர் அங்கும் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளார். வீட்டுத் திட்டங்களைக் கையளிக்கும் அவர் மயிலிட்டியில் அமைக்கப்பட்ட துறைமுகத்தை மக்களுடைய பாவனைக்குக் கையளிப்பார். இந்திய நிதியுதவில் அமைக்கப்பட்டுவரும் யாழ்ப்பாணக் கலாசார மண்டபத்தின் கட்டுமானப் பணிகளையும் அவர் பார்வையிடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *