சஜித்தைக் களமிறக்க ரணில் கொள்கையளவில் இணக்கம்! – செயற்குழுவில் பெயரைப் பிரேரித்து வாக்கெடுப்பு நடத்துவதற்கும் முடிவு

ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதற்குப் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடத்திய சந்திப்பின்போதே இந்த இணக்கம் காணப்பட்டது என்று அறியமுடிகின்றது.

எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நாட்டின் பிரதான கட்சிகள் தமது வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன தமது வேட்பாளர்களை இன்னமும் பெயரிடாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முன்னாள் பாதுகாப்புச் செயலரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் 18ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என்று அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மௌனமாக இருக்கும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. அந்தக் கட்சிக்குள் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாஸ என மூவரின் பெயர்கள் ஜனாதிபதி வேட்பாளருக்காகப் பரிந்துரைக்கப்பட்டன. கட்சியால் பெயரிடப்படாத நிலையில் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராகத் தானே களமிறங்குவேன் என்று தெரிவித்ததுடன், அதற்கான முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தார். இந்த முரண்பாடுகளால் ஜனாதிபதித் தேர்தலுக்கான கூட்டணியை அறிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முயற்சியும் இடைநடுவில் நிறுத்தப்பட்டிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவே களமிறக்கப்பட வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளனர். நேற்றுமுன்தினம் பதுளையில் சஜித் பிரேமதாஸவுக்கு வரவேற்பளிக்கும் மாநாடு ஒன்றை நடத்தியிருந்ததுடன், பெரும் எண்ணிக்கையான மக்களையும் மாநாட்டுக்குத் திரட்டியிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராகக் கோட்டாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை எதிர்த்துக் களமிறங்கும் வல்லமை ஐக்கிய தேசியக் கட்சியில் சஜித் பிரேமதாஸ மற்றும் சரத் பொன்சேகா ஆகியோருக்கே உள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சரத் பொன்சேகா முன்னர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்ச தரப்பு அதைத் தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்தக் கூடும் என்பதால் சஜித் பிரேமதாஸவைக் களமிறக்குவதே சிறந்த வழி என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் சஜித் பிரேமதாஸவுக்கு மக்கள் ஆதரவு இருப்பது பதுளையில் நடந்த கூட்டத்தின் மூலம் தெரிகின்றது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமிங்க இந்த விடயங்களை ஏற்றுக்கொண்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதற்கு அவர் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளார். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பின்படி ஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் மத்திய செயற்குழுவே தீர்மானிக்க முடியும். அதனால் மத்திய செயற்குழுவில் சஜித் பிரேமதாஸவின் பெயரைப் பிரேரித்து வாக்கெடுப்பு நடத்தி வேட்பாளரைத் தெரிவு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்தனர் என்று அறியமுடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *