எனது சகோதரனை உங்களுடைய சகோதரனாக ஒப்படைக்கின்றேன்! – கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து மஹிந்த நாட்டு மக்களுக்கு உரை

“மக்கள் கூறியவற்றை அவதானத்தில் கொண்டு புதிய ஒருவரைத் தேடினேன். நான் தெரிவு செய்யாவிடினும் கோட்டாபய ராஜபக்ச உங்களது சகோதரர் ஆகிவிட்டார். எனவே, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்சவைக் களமிறக்கத் தயார். என்னுடைய சகோதரனை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன். கோட்டாபய எப்போதும் தன்னை ஜனாதிபதி வேட்பாளராக்குமாறு கேட்டுக்கொள்ளவில்லை. கோட்டாபயவை வலுப்படுத்துவதற்காக அவரை நியமிக்கவில்லை.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் அந்தக் கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்ற பின்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கதவடைக்க முயற்சி

“நாட்டில் அனைவரும் சாதி, மதங்களுக்கு உட்படாமல் ஒன்றாக இருக்கக்கூடிய கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி இன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணமாக இருந்த பஸில் ராஜபக்சவுக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

இந்த நாள் வராமல் இருப்பதற்கு தற்போதைய அரசு, கடந்த காலத்தில் செயற்பட்டது. ராஜபக்ச குடும்பத்தை அரசியலுக்கு வராமல் இருக்க செய்வதற்காக அரசமைப்பை மாற்றியது. எமது சுதந்திரத்துக்காக, நாட்டின் சுதந்திரத்தை நாம் விட்டு கொடுக்கவில்லை. நாட்டின் சுதந்திரத்தை இல்லாதொழிக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. எம்மை இனவாதிகள் என்று கூறினார்கள். நாம் அவ்வாறு கிடையாது. ஆனால், இந்த அரசு எந்தவொரு மதத்துக்கும் மார்க்கத்துக்கும் மதிப்பளிக்கவில்லை.

இந்த அரசு ஜெனிவாவில் உடன்படிக்கைகளை கைச்சாத்திடும்போதும், மண்சரிவு ஏற்படும்போதும், கொழும்பு முதல் மட்டக்களப்பு வரை குண்டு வெடிக்கும்போதும், வரி அறவிடும்போதும், கொழும்பில் குப்பை துர்நாற்றம் வீசும்போதும் அது குறித்து இந்த அரசுக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த நாட்டு மக்களுக்கு அப்போது எம்மை நினைவுக்கு வந்தது. நாட்டுக்கு எமது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த நாட்டை விடவும் மோசமான நாடொன்றையே பொறுப்பேற்க வேண்டியுள்ளது. அச்சமின்றி விகாரைக்கு சென்று, அன்னதானம் கொடுக்கக்கூடிய நாடொன்றை உருவாக்க வேண்டும். கிறிஸ்தவர்கள், இந்துகள், முஸ்லிம்களுக்கு அச்சமின்றி அவர்களது மதத்தலங்களுக்கு செல்லக்கூடிய வகையிலான நாடொன்றை உருவாக்க வேண்டும்.

சட்டம், ஒழுங்கு சீர்குலைவு

முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல என்ற எண்ணம் கொண்ட நாடொன்று தேவைப்படுகின்றது. 365 நாட்களும் அவதானத்துடன் இருக்கக்கூடிய தலைவர் ஒருவர் தேவை. நாடொன்றில் ஒழுக்கம் இருக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு வேண்டும். நண்பகலில் கொள்ளை, கொலை இடம்பெறுமாயின், இந்த நாட்டில் சட்டம், ஒழுங்கு கிடையாது. அவ்வாறு ஒழுக்கம் உள்ள ஒருவர் தேவைப்படுகின்றார்.

உலகிலேயே மிக மோசமான தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முடியும் என்று 2005ஆம் ஆண்டு யாரும் நினைக்கவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு தமது குழந்தைகளை சுதந்திரமாக ரயிலில் அழைத்து வர முடியும் என்று தமிழ் மக்கள் நினைக்கவில்லை. முஸ்லிம் மக்கள் தமது சொந்த இடத்தக்குச் செல்ல முடியும் என அவர்கள் நினைக்கவில்லை. ஆசியாவிலேயே மிக சுத்தமான நகரமொன்றை உருவாக்க முடியும் என யாரும் நினைக்கவில்லை. நாம் அதனை செய்தோம். எதிர்காலத்தில் அவ்வாறு செய்யக்கூடிய ஒருவர் தேவைப்படுகின்றார்.

வடக்குக்கு ஜனநாயகம்

30 வருட காலம் வடக்கு தமிழ் மக்களின் ஜனநாயகம் இல்லாது செய்யப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாணத்திலுள்ள நூலகத்தை எரித்தது. இந்தநிலையில், வடக்கில் மாகாண சபை தேர்தலை 30 வருடங்களின் பின்னர் நாமே அந்த தேர்தலை நடத்தினோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு பின்னரே வடக்குக்குச் சென்றது. வடக்கு மக்களின் ஜனநாயகம் பறிக்கப்பட்டுள்ளது. அந்த மக்களுக்கு ஜனநாயகத்தை மீண்டும் வழங்க வேண்டும். வடக்கு கிழக்கு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இவை குறித்து சிந்திக்கக்கூடிய ஒருவரை நான் நினைத்தேன்” – என்றார்.

மஹிந்த ராஜபக்ச தமிழிலும் உரையாற்றினார்.

“நாட்டின் நிரந்தர சுதந்திரம், சமவுரிமையை பெற்றுக் கொடுக்க நாம் முன்னின்று செயற்படுவோம். தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றாத ஒருவரே எமது வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும். சட்டத்தை பாதுகாக்கக்கூடிய ஒருவர் வேண்டும். விவசாயத்துறையை மேம்படுத்தக்கூடிய ஒருவர் வேண்டும்” என்று மஹிந்த தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *