நாவற்குடாவில் கோர விபத்து! இருவர் பலி; ஒருவர் படுகாயம்!!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி, நாவற்குடா விவேகானந்த விளையாட்டு மைதானத்துக்கு இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன், ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குருணாகலில் இருந்து காத்தான்குடிக்கு கல் ஏற்றிக்கொண்டு முன்னால் சென்ற கனரக வாகனத்தின் ரயர் வெடித்த நிலையில், ஏறாவூரில் இருந்து காத்தான்குடிக்குக் கோழிகளை ஏற்றிகொண்டு பின்னால் வந்த கன்ரர் வாகனம் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் கோழிகளை ஏற்றி வந்த கன்ரர் ரக வாகனத்தில் இருந்த மூவரில் இருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். மற்றவர் படுகாயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் ஏறாவூர் ஹிஸ்புல்லா நகர், ஆர்.டி. எஸ். வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய டி மனாப், ஏறாவூர் கலைமகள் பாடசாலை முன்வீதியைச் சேர்ந்த 25 ஹிஸ்மி ஹசன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

சம்பத்தில் உயிரிழந்த ஹிஸ்மி ஹசனின் சகோதரான 20 வயதுடைய றிஸ்மி என்பவரே படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்தவர்களின் சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணைகளைக் காத்தான்குடிப் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *