கோட்டாவை சித்தார்த்தன் இரகசியமாகவே சந்தித்தார்! – கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவிப்பு

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை இரகசியமாகவே சந்தித்தார். அது தொடர்பான தகவல்கள் வெளிவந்ததும் அதனை அவர் ஒப்புக்கொண்டார்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வல்வெட்டித்துறையில் ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகம் திறக்கும் நிகழ்வில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

‘ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கப் போகின்றது’ என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு,

“எந்தக் கட்சியும் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இவ்வாறான நிலைமையில் நாங்கள் முடிவெடுக்க முடியாது. எந்த அரசியல் கட்சியும் தங்களுடைய வேட்பாளர் யார் என்றோ தங்களுடைய கொள்கை இது என்றோ இதுவரை சொல்லவில்லை. வேட்பாளர்களை அறிவித்த பின்னர், அந்த வேட்பாளர்கள் தங்களுடைய கொள்கை என்ன என்பதை அறிவித்த பின்னர், அவர்களுடன் நாங்கள் சந்தித்து உரையாடிய பின்னர் முடிவுக்கு வருவோம்” – என்றார்.

யாழ்ப்பாணத்தில் இந்துக்குருமார்களைச் சந்தித்தமை தொடர்பில் கேட்டபோது,

“இந்து மதத்துக்கு எதிராக நடத்தப்படுகின்ற வன்முறைகள் சம்மந்தமாக அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்துவதில்லை என்ற ஒரு குறைபாட்டைக் கொண்டிருந்தார்கள். கன்னியாவிலே அத்துமீறல் பௌத்த மயமாக்கல் என்பவற்றைத் தடுத்து நிறுத்தி நீதிமன்றக் கட்டளையை நான் பெறுவதற்கு முன்னதாக கூட நான் யாழ்ப்பாணத்திலே அவர்களைச் சந்தித்து உரையாடியிருந்தேன்.

எப்படி இதைக் கையாள்வது, எப்படித் தடுப்பது, இந்து சமயம் மாத்திரமல்ல தமிழர்களுடைய கலாசார விழுமியங்களும் இப்போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. அதிலே முக்கியமாக இந்து சமயத்துக்குப் பெரிய சவால் வந்திருக்கிறது என்ற விடயங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

திருக்கேதீஸ்வரத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய பிரச்சினை தொடர்பாக முக்கியமாக உரையாடினார்கள். அது தொடர்பாக அரசியல் தலைவர்களாக நாங்கள் ஏற்கனவே சில முயற்சிகளை எடுத்திருக்கின்றோம்.

சமூகங்களுக்கிடையிலே பிளவு ஏற்படாதவாறு அதனை சுமுகமாகத் தீர்ப்பதற்காக சில நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம். அது இன்னும் சாத்தியமாகவில்லை. அந்த வளைவை மீள அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளுக்கு நாங்கள் அவர்களுக்கு உதவியாக இருப்போம் என்று உறுதிமொழி வழங்கியுள்ளேன்.

அது தொடர்பாக மிகவிரைவில் கத்தோலிக்க மதத் தலைவர்களையும் நாங்கள் சந்தித்து பேசுவோம். எங்களுடைய கத்தோலிக்க – இந்து மக்களுடைய உறவைப் பாதிக்காத வகையில் நாங்கள் செயற்படுவோம்.

இந்து, கத்தோலிக்க மக்கள் மட்டுமல்ல இஸ்லாமிய மக்களுடைய மத ஒற்றுமைகளையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். எங்களுடைய கலாசார விழுமியங்களைப் பாதுகாக்க நாங்கள் முன்வரவேண்டும் என்று அவர்களுடைய கோரிக்கையை ஏற்றிருக்கின்றேன்.

இவை தொடர்பில் நாங்கள் கிரமமாக சந்திப்புக்களை நடத்தி இடம்பெறுகின்ற மேலாதிக்க அத்துமீறல்களை எப்படித் தடுப்பது என்பது குறித்துப் பேசுவோம். நடவடிக்கைகளும் எடுப்போம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *