இங்கு இன்னொரு பிரபாகரன் உருவாகுவதை தீர்மானிப்பது அரசின் கையில்தான் உள்ளது! – வல்வை மண்ணில் வைத்து மங்கள முன்பாகத் தெரிவித்தார் சுமந்திரன்

“வல்வெட்டித்துறை மண்ணிலிருந்து இரண்டு பேர் உலக சாதனை படைத்துள்ளார்கள். ஒருவரை இன்று நினைவுகூருகின்றோம். மற்றவரைப் போன்று இன்னொருவர் எங்கள் மத்தியிலிருந்து எழுவதா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பது தெற்கு மக்களும், உங்கள் அரசியலும், ஜனாதிபதியும்தான்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அந்த மண்ணில் பிறந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத்தான், சுமந்திரன் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக அமைக்கப்பட்ட நீச்சல் தடாகம் வல்வெட்டித்துறையில் நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றிய சுமந்திரன் எம்.பி. மேலும் கூறியதாவது:-

“உலக சாதனை படைத்தவர்கள் வல்வை மண்ணிலிருந்துதான் வந்துள்ளார்கள். இந்த மண்ணிலிருந்து இரண்டு பேர் உலக சாதனை படைத்துள்ளார்கள். ஒருவரை இன்று நினைவுகூருகின்றோம். மற்றையவரின் சாதனை பல்வேறு வடிவத்திலும் எழுத்திலே படத்திலே வரையப்பட்டிருக்கின்றது.

இந்தத் தருணத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் முக்கிய வேண்டுகோளை முன்வைக்கின்றேன். இந்த நாட்டில் தலைவர்களை உருவாக்கும் பெருமையைக் கொண்டவர் அவர். அவர் நாட்டுத் தலைவராகுவதில்லை. ஆனால், நாட்டின் தலைவர்களை உருவாக்குவதில் முதன்மையானவர்.

மற்றொரு ஜனாதிபதிக்கான தேர்தல் அண்மித்துள்ளது. இந்த நேரத்தில் அவரின் பங்கு முக்கியமானது. நிகழ்வின் ஆரம்பத்திலேயே இந்த மண்ணில் தோன்றிய இரண்டு சாதனையாளர்கள் பற்றிச் சொன்னேன். அதில் ஒருவருக்கு நீச்சல் தடாகம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

மற்றையவரைப்போல் இன்னொருவர் எங்கள் மத்தியில் உருவாகுவாரா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். தெற்கில் உள்ள நீங்கள்தான். உங்களுடைய அரசியலும், நீங்கள் உருவாக்குகின்ற அரச தலைவர்களும்தான் அப்படி ஒன்று நடக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதாக இருக்கும். ஆகவே, நிதானமாகச் செயற்பட்டு நாங்கள் பழைய நினைவுகளுடனே மட்டும், இந்தச் செயற்பாடுகளோடு தொடர்ந்து எதிர்காலத்தில் பயணிக்க ஆவண செய்யவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *