வரலாறு காணாத பாதுகாப்போடு நல்லூர் கந்தன் கோயில் திருவிழா! – ஆலயச் சூழல், நகரப் பகுதி வீதிகளில் கடும் பாதுகாப்புக் கெடுபிடிகள்

யாழ். நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தையொட்டி யாழ்ப்பாணக் குடாநாடு 3 அடுக்குப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வரலாற்றில் என்றுமில்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆலயச் சூழலிலும் யாழ்ப்பாணம் நகரப் பகுதிகள், வீதிகளில் இராணுவத்தினர், பொலிஸார் கடும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் முருகன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. 25 தினங்கள் திருவிழா இடம்பெறவுள்ளது. ஆலயச் சூழலில் பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆலயத்தின் பாதுகாப்பையும் , ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் முகமாக ஆலயத்தை சூழவுள்ள வீதிகள் மூடப்பட்டு பொதுப் போக்குவரத்துக்கு தடைகள் போடப்பட்டு, மாற்று வீதிகள் ஊடாக வாகனங்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் வழமைபோன்று செய்யப்பட்டுள்ளன.

ஆலய சூழலில் நேற்று விசேட தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்டனர். ஆலயச் சூழலை தமது பாதுகாப்பின் கீழ் கொண்டு வருவதற்காகவே அந்தத் தேடுதல்கள் இடம்பெற்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலயத்துக்கு வருவோரைச் சோதனை செய்தவதற்கான சோதனைக் கூடங்கள் ஆலயத்துக்குச் செல்லும் நான்கு வீதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயச் சூழலில் பெருமளவு பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகின்றது.

அதேவேளை யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் படையினர் வீதித் தடைகளை ஏற்படுத்திச் சோதனை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

நகரின் மத்தியில் ஸ்ரான்லி வீதி, கொழும்புத்துறை, அரியாலை, ஏ-9 வீதி, நாவற்குழிப் பகுதி போன்ற இடங்கள் உட்படப் பல இடங்களில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் வாகனங்கள் சோதனையிடப்படுவதுடன், அடையாள அட்டைககளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

விசேட அதிரடிப் படையினரின் மோட்டார் சைக்கிள் பிரிவினர் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆலயத்தைச் சூழ உள்ள வீதித் தடைகளில் பொலிஸாரும், இராணுவத்தினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்படடுள்ளனர். ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்களும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

குடாநாடு முழுவரும் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புக் கெடுபிடிகளால் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியுள்ளது என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அதேவேளை, அமைதியை, பக்தியை வேண்டி ஆலயத்துக்கு வருபவர்களுக்குப் பொலிஸாருடைய சோதனைகள் மற்றும் அவர்களுடைய நடமாட்டங்கள் இடையூறாக அமையக் கூடாது என்று அடியவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *