அமெரிக்காவின் விருப்பம் கருவே; அதனால் அவர் களமிறங்கக் கூடும்! – அஞ்சமாட்டோம் என்கிறார் தினேஷ்

“இலங்கையில் இவ்வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அல்லது அக்கட்சியின் பேராதரவுடன் பொது வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் விரும்புகின்றன. எனவே, அவர் ஏதோவொரு வழியில் வேட்பாளராகக் களமிறங்கக்கூடும். இது குறித்து நாம் குழப்பமோ அல்லது அச்சமோ அடையவில்லை.”

– இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையைத் தானே முன்னின்று ஒழிப்பார் என்ற உறுதிப்பாட்டுடன் அந்தப் பணிக்கான பொது வேட்பாளராகத் தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவை இறக்குவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீட வட்டாரங்களில் ஓர் பொது இணக்க நிலை ஏற்பட்டிப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன. இது தொடர்பில் மஹிந்த அணியின் நிலைப்பாடு என்னவென்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சர்வதேச நாடுகளுக்கு இலங்கையைத் தாரைவார்த்துக் கொடுத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, அந்த நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கரு ஜயசூரியவைத்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அல்லது அக்கட்சியின் பேராதரவுடன் பொது வேட்பாளராகக் களமிறக்க வேண்டும் என்பதில் குறியாகவுள்ளனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கூட்டு அரசை உடைத்து நாம் ஆட்சியைக் கைப்பற்றியிருந்த வேளை, அதற்கு முடிவுகட்ட மேற்குலக நாடுகள் சபாநாயகர் கரு ஜயசூரியவைத்தான் பயன்படுத்தியிருந்தன. அப்போதே ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் கரு ஜயசூரியவேதான் என்று நாம் நினைத்திருந்தோம். அதன்படி இப்போது நடக்கின்றது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒழிப்போம் என்று முழக்கமிட்டு ஜனாதிபதிக் கதிரையில் ஏறியவர்கள் எவரும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கரு ஜயசூரியவும் அவ்வாறே நடப்பார்.

ஜனாதிபதித் தேர்தலில் கரு ஜயசூரிய வேட்பாளராகப் போட்டியிடுவது குறித்து நாம் குழப்பமோ அல்லது அச்சமோ அடையவில்லை. ஏனெனில், ராஜபக்ச அணியில் பலமிக்க வேட்பாளர்தான் களமிறங்கவுள்ளார். எனவே, எமது அணியைச் சேர்ந்த வேட்பாளர்தான் வெற்றியடைவார்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *