தமிழ், முஸ்லிம்களின் ஆதரவுடன் தாமரை மொட்டின் ஆட்சி மலரும்! – பஸில் நம்பிக்கை

“தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஆட்சி விரைவில் மலரும்.”

– இப்படிக் கூறியுள்ளார் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதான அமைப்பாளருமான பஸில் ராஜபக்ச.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் அதன் பின்னர் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் தரமான – தகுதியான வேட்பாளர்களே போட்டியிடுவார்கள். இரண்டு தேர்தல்களிலும் எமது கட்சியே வெற்றி பெறும். அது இப்போதே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.

இந்த இரண்டு தேர்தல்களிலும் சிங்கள மக்களுடன் சேர்ந்து தமிழ், முஸ்லிம் மக்களும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு அமோக ஆதரவு வழங்குவார்கள். அவர்கள், தற்போதைய ஆட்சியை வெறுத்துவிட்டார்கள். ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் அவர்கள் குறியாக உள்ளார்கள். எனவே, ஆட்சி மாற்றத்தை விரும்பும் தமிழ், முஸ்லிம் மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கே பேராதரவு வழங்குவார்கள்.

இனக்கலவரம், மதக்கலவரம் இன்றி மூவின மக்களும் ஒற்றுமையாக வாழும் நிலையை எமது ஆட்சியில் ஏற்படுத்துவோம்.

மூவின மக்களின் அடிப்படைத் தேவைகள் உட்பட அனைத்துத் தேவைகளையும் நாம் நிறைவேற்றிக்கொடுப்போம். வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் ஓர் உறவுப்பாலத்தை நாம் ஏற்படுத்துவோம்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *