மீண்டும் நுண்கடன் பிரச்சினைகள்: மங்களவுடன் மாவை நேரில் பேச்சு!

“வடக்கு, கிழக்கில் மீண்டும் நுண்கடன் பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. இவை தொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவை நான் நேரில் சந்தித்துப் பேசவுள்ளேன்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கு, கிழக்கில் அதிக பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வாழ்வதால் வருமானம் இன்றி நுண்கடனைப் பெற்று நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர். இது தொடர்பாக நிதி அமைச்சர், பிரதமர் கவனத்துக்குக் கொண்டு சென்று நுண்கடனை நீக்க கடந்த வருடம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதை நீக்க ஏற்பாடு இடம்பெற்ற வேளை அதேபோன்று தெற்கிலும் 16 ஆயிரம் பேர் பாதிப்படைந்திருந்தமையால் நாடு பூராகவும் 40 ஆயிரம் பேரின் நுண்கடன் நீக்கப்பட்டது.

அவ்வாறு நீக்கும்போது பலர் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களிலும் சிலர் ஆடம்பரத் தேவைக்காகவும் நுண்கடன் பெற்றுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் தீர்வு வழங்கப்பட்டது.

அதன் பின்பு தற்போது மீண்டும் அதே நெருக்கடி வடக்கு, கிழக்கில் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக நிதி அமைச்சரின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டு செல்லப்படும். அவரை நான் நேரில் சந்திக்கவுள்ளேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *