புதிய முறைமையின்கீழ் மாகாண சபை தேர்தலை நடத்த அனுமதிக்கவே கூடாது! – சிறுபான்மையினருக்குப் பெரும் பாதிப்பு என்கிறார் நஸீர்

“உள்ளூராட்சி சபைகளுக்காக நடத்தப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படுமானால் அது சிறுபான்மை மக்களது பிரதிநிதித்துவத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த விடயத்தில் சிறுபான்மை மக்களை குறிப்பாக முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் கடும் அவதானம் கொண்டு செயற்பட வேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான நஸீர் அஹமட்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“மாகாண சபைத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது எனவும், இதற்கான உயர்நீதிமன்றம், சட்டமாஅதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆகியோர்களிடம் ஜனாதிபதி யோசனைகளைப் பெற்றுக்கொண்டுள்ளார் எனவும், அவரது விருப்பம் புதிய முறைமையில் தேர்தலை நடத்துவது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த விடயத்தில் சிறுபான்மை கட்சிகள் கவனமாகச் செயற்பட வேண்டும்.

கடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் மூலமாகக் கிடைக்கப் பெற்ற பெறுபேறுகளை சிறுபான்மைக் கட்சிகள் தெளிவுபட அறிந்து, அவற்றின் சாதக பாதகங்களை விளக்கி மாகாண சபைகளுக்கான தேர்தலைப் பழைய முறைமையின் (விகிசாரத் தேர்தல்) கீழ் நடத்த வேண்டும் எனக் கோரியிருந்த போதும் – அதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டும் வந்த நிலையிலும் திடீரெனப் புதிய முறைமையில் தேர்தலை நடத்துவது என எடுக்கும் தீர்மானம் வரவேற்கத்தக்கதல்ல. ஒருவேளை இது நடக்குமானால் 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட புதிய தேர்தல் முறைமைக்கான பிரேரணைக்கு ஆதரவாக ஆட்சியைக் காப்பாற்றுகின்றோம் என்ற கோதாவில் கைதூக்கியவர்கள் அனைவரும் இதற்குப் பெறுப்புக்கூறவேண்டும்.

புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் அதன் பெறுபேறுகள் எத்தகைய அவலங்களை சபை நடவடிக்கைகளில் ஏற்படுத்தி உள்ளன என்பதை யாவரும் அறிவர். முற்றுமுழுதாக தோல்வியுற்ற ஒரு தேர்தல் முறைமை அது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் ஆய்வாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் பிரதமர் இந்த விடயத்தில் மேற்கொண்ட நழுவல்போக்கும் உதாசீனங்களும் காலதாமதங்களும் திருப்தி தருவனவாக அமையவில்லை. இந்தநிலையில், ஜனாதிபதி மட்டும் புதிய தேர்தல் முறைமையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதன் மர்மமும் புரியவில்லை.

இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்களின் கோரிக்கைகள் அவ்வப்போது உதாசீனம் செய்யப்பட்டுவரும் நிலையில் அவர்களது பிரதிநிதித்துவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நாம் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, இந்த விடயத்தில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *