ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ஐக்கிய தேசியக் கட்சி மூன்றாக உடையுயாம்! – மஹிந்த கூறுகின்றார்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளிவந்ததும், ஐக்கிய தேசியக் கட்சி மூன்றாகப் பிளவுபடும் என்று தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளிவந்ததும், சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப இயங்குகின்ற ஐக்கிய தேசியக் கட்சி மூன்றாகப் பிளவுபட வாய்ப்புக்கள் மிகமிக அதிகம். ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ, கரு ஜயசூரிய ஆகியோருக்கு ஆதரவானவர்கள் தமக்குள் பிளவுபடுவார்கள்.

சஜித் பிரேமதாஸவை இந்தியாவும், கரு ஜயசூரியவை அமெரிக்காவும் இயக்குகின்றன. புலம்பெயர் புலிகளின் நாடு கடந்த தமிழீழ அரசால் ரணில் இயக்கப்படுகின்றார். எனினும், இறுதிநேரத்தில் சர்வதேச சமூகத்தின் தலையீட்டால் தீர்க்கமான முடிவொன்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வரலாம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரும்பினால் எம்முடன் இணையலாம். ஆனால், ஜனாதிபதி வேட்பாளர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சார்ந்தவராகவே இருப்பார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் தோற்பது உறுதி. அதேவேளை, எமது வேட்பாளர் வெல்வது உறுதி.

ராஜபக்ச குடும்பத்தை எவரும் இலகுவாக எடுக்க வேண்டாம். ராஜபக்ச சகோதரர்கள் அனைவரும் ஜனாதிபதி வேட்பாளருக்குத் தகுதியானவர்கள். தேர்தலில் களமிறங்கத் தயாராகவும் உள்ளனர். ஆனால், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்துள்ள சக கட்சிகளின் கருத்துக்களைக் கேட்டே எதிர்வரும் 11ஆம் திகதி எமது கட்சியின் வேட்பாளர் யாரென அறிவிக்கப்படுவார்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *