கர்நாடக ஆலயங்களில் ரணில் விசேட வழிபாடு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினமும், நேற்றும் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆலயங்களில் விசேட வழிபாடுகளிலும், யாகங்களை நடத்துவதிலும் ஈடுபட்டார்.

நேற்றுமுன்தினம் காலை பெங்களூர் சென்றடைந்த பிரதமர் ரணில், அங்கிருந்து ஹெலி மூலம் மங்களூர் செல்லத் திட்டமிட்டிருந்தார்.

சீரற்ற காலநிலையால் அவர் தரைவழியாகவே மங்களூர் சென்று, உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் நேற்றுமுன்தினம் வழிபாடுகளை மேற்கொண்டார்.

ரணில் விக்கிரமசிங்கவின் ஏற்பாட்டில் இங்கு விசேட யாகம் ஒன்றும் நடத்தப்பட்டது.

கடும் மழைக்கு மத்தியில் அவர் வழிபாடுகளை மேற்கொண்டபோது, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், பாதுகாப்புக்காக கொல்லூர் பகுதியில் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து நேற்றுப் பிரதமரும் அவரது மனைவி மைத்ரி விக்கிரமசிங்கவும், காசர்கோட்டில், கும்லாவுக்கு அருகே உள்ள பெலா, குமாரமங்கலம் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டனர்.

இந்த ஆலயத்துக்கு ரணில் விக்கிரமசிங்க முதல்முறையாக நேற்று வந்திருந்தார் எனக் குறிப்பிட்டுள்ள குமாரமங்கலம் ஆலயத்தின் பூசகர், ஜோதிடர் ஒருவர் ஆலோசனையின் பேரிலேயே அவர் வழிபாடுகளை மேற்கொண்டார் எனத் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் ஆன்மீகப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் ரணில் தனது மனைவியுடன் நேற்றிரவு கொழும்பு திரும்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *